Enable Javscript for better performance
உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரித்தால் நடவடிக்கை: கோட்டாட்சியர் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரித்தால் நடவடிக்கை: கோட்டாட்சியர் எச்சரிக்கை

    By கடலூர்,  |   Published on : 15th October 2016 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உரிமம் இல்லாமல் பட்டாசு, வெடிபொருள் தயாரித்து விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் கோட்டாட்சியர் எச்சரித்துள்ளார்.
     விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டாசு ஆலையில் அண்மையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
     இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வெடிபொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் குழுக்களை அமைத்தார். கோட்டாட்சியர்கள் தலைமையில் அமையப்பெற்ற இக்குழுவில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
     கடலூர் கோட்டத்துக்கு கோட்டாட்சியர் நா.உமாமகேஸ்வரி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் வெள்ளிக்கிழமை கடலூர் பகுதியில் உள்ள வெடிபொருள் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
     பின்னர் கோட்டாட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: கடலூர் கோட்டத்தில் உரிமம் பெற்று இயங்கிவரும் வெடிபொருள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் இடங்களை பார்வையிட்டு அங்கு அடிப்படை வசதிகள் உள்ளனவா, வெடிபொருள் தயாரிக்கும் உரிம தலங்கள் அனுமதி பெற்ற இடத்தில் இயங்குகின்றனவா, உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, பணியாளர்கள் உரிய எண்ணிக்கையில் உள்ளனரா, அனைவருக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா, வெடிபொருள் தயாரிக்கும் கூடத்துக்கும் இருப்பு வைக்கப்படும் கூடத்துக்கும் இடையே உள்ள தூரம் உரிமத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவாறு சரியாக உள்ளதா என ஆய்வு செய்து வருகிறோம். கடலூரில் தனியார் நிறுவனம் ஒன்றினை ஆய்வு செய்தோம். இங்கு 4 பேர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவான 4 கிலோ வெடிபொருள்கள் மட்டுமே இருப்பு வைத்துள்ளனர். கடலூர் கோட்டத்தில் 13 இடங்களில் உரிமம் பெற்று வெடிபொருள் தயாரித்து வருகின்றனர். 146 பேர் பட்டாசுகளை வாங்கி விற்கும் உரிமம் பெற்றுள்ளனர். உரிமம் இல்லாமல் முறைகேடாக பட்டாசு தயாரிப்பது தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
     ஆய்வின்போது வட்டாட்சியர் அர.அன்பழகன், சமூகநல பாதுகாப்பு வட்டாட்சியர் ஜெ.ஜான்சிராணி, கிராம நிர்வாக அலுவலர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai