Enable Javscript for better performance
பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் மறியல்: 126 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் மறியல்: 126 பேர் கைது

    By சிதம்பரம்,  |   Published on : 15th October 2016 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி டெல்டா கடைமடை பகுதிகளில் பாசனத்துக்கு போதிய அளவு தண்ணீர் திறக்கக் கோரி காட்டுமன்னார்கோயில் அருகே பொதுப்பணித் துறை அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிடச் சென்றபோது போலீஸார் தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 126 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     காவிரி டெல்டா கடைமடை பகுதிகளாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம், நாகை மாவட்டம் சீர்காழி, தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர், அரியலூர் மாவட்டம் டிபழுர் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில், கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி சுமார் 1.31 லட்சம் ஏக்கரில் பாசனம் நடைபெறுகிறது.
     கடந்த மாதம் 20ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையில் தேக்கப்பட்டு, 24ஆம் தேதி காவிரி கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆற்றை கடந்து கீழணைக்கு வந்து சேரவில்லை.
     மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்ட உடன் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், குமராட்சி பகுதி விவசாயிகள், அப்போது பெய்த மழையை பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்தனர். சில விவசாயிகள் ஆழ்குழாய் கிணற்றின் மூலம் தண்ணீர் பெற்று நாற்று விடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், ஆற்று தண்ணீருக்காக காத்திருந்தனர். ஆனால் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு வந்துசேரவில்லை. போதிய மழையும் பெய்யவில்லை. இதன் காரணமாக, நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் முளைத்து வந்த நெற்பயிர்கள் கருகின. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி வந்தனர்.
     இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் மூலமாக திருச்சி மண்டல தலைமை பொறியாளருக்கு 3-க்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதப்பட்டன. பொதுப்பணித் துறை சார்பில் அதிகாரிகள் நேரடியாக தஞ்சை மற்றும் திருச்சி சென்று கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தி வந்தனர்.
     இந்நிலையில் விவசாய சங்கத் தலைவர்கள், வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சினர் வெள்ளிக்கிழமை காட்டுமன்னார்கோவில் அருகே அணைக்கரையில் உள்ள கீழணை பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக விவசாயிகள் ஊர்வலமாகச் சென்ற போது போலீஸார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
     மறியலுக்கு கொள்ளிடம் கீழணை பாசன சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். விவசாய சங்கத் தலைவர்கள் கே.வி.இளங்கீரன், பி.ரவீந்தரன், மதிவாணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ராயநல்லூர் கண்ணன், திமுக கல்யாணசுந்தரம், பாமக ராஜ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இளந்தமிழன், ராதாகிருஷ்ணன், தேமுதிக மூவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     பொதுப்பணித் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கும் திருச்சி மண்டல பொதுப்பணித் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து போலீஸார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அழைத்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
     அப்போது, விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் 24ஆம் தேதியிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு மற்றும் தற்போது திறக்கப்படும் அளவு விபரங்களை தெரிவிக்க வேண்டும். கருகும் பயிற்களை காப்பாற்ற விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கோரினர். இதற்கு அதிகாரிகள் உடன்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 126 பேரை போலீஸார் கைது செய்தனர். மறியலால் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai