நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
20-ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சி வருகிற ஜூன் 30-ஆம் தேதி முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை நெய்வேலி வட்டம், 11-இல் உள்ள லிக்னைட் அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக நெய்வேலியில் மிகப் பெரிய அளவில் புத்தகக் கண்காட்சியை என்எல்சி நிர்வாகம் கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தக் கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட புத்தகப் பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.
மேலும், கணினி மென்பொருள் தயாரிப்பாளர்களும் பங்கேற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது, விழுப்புரம், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் திரளான வாசகர்கள் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாள்களில் எழுத்தாளர் ஒருவரும், புத்தகப் பதிப்பாளர் ஒருவரும் கெளரவிக்கப்படுவதோடு, தினமும் புத்தகம் ஒன்றும் வெளியிடப்படுகிறது.
மேலும், வாசகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தினமணி - நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி குழு இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி, வாசகர்களுக்கான சிறுகதைப் போட்டி, குறும்படப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
நிகழ் ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரங்கு அமைக்கும் பணி, வாசகர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.