பள்ளிகள் திறந்த முதல் நாளே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டதால், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோடை விடுமுறைக்குப் பின்னர், தமிழகம் முழுவதும் பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,424 அரசுத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், 298 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், 121 மெட்ரிக் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின.
இந்த நிலையில், பள்ளிகள் திறந்த முதல் நாளே பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அதன்படி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அளவில் சுமார் 1.14 லட்சம் மாணவர்களுக்கும், கடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அளவில் 1.06 லட்சம் மாணவர்களுக்கும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 52 ஆயிரம் மாணவர்களுக்கும் என மொத்தம் 2.72 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பள்ளிகள் தொடங்கிய முதல் நாள் என்பதால், மாணவர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது, கடலூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து விளக்கப்பட்டன. பெரும்பாலான பள்ளிகள் அரை நாள் மட்டுமே இயங்கின.
பெரும்பாலான மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்றதையும், தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் அழைத்து வந்து பள்ளிகளில் விட்டுச் சென்றதையும் காண முடிந்தது.
நெய்வேலியில்...: வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி, தமிழக அரசின் இலவச பாடநூல், பாடக் குறிபேடுகள், சீருடை, புத்தகப்பை, கணித உபகரணப் பெட்டி உள்ளிட்ட 14 வகையான பொருள்களை, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பயிலும் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
கடலூர் மாவட்ட கல்வி ஆய்வாளர் விஜயகுமார், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் வெ.ராமானுஜம், தலைமை ஆசிரியர் மாணிக்கம், பூர்ணிமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சு.இளங்கோ, ஆசிரியர்கள் ஜே.சந்திரமோகன், சக்கரவர்த்தி, ரா.செந்தில்குமார், எம்.சுப்ரமணியன், எம்.நவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழாசிரியர் பழனிவேல் நன்றி கூறினார்.
அதேபோல வடலூர், புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை இறை வணக்கக் கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ரா.திருமுருகன் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் சி.மதியழகன் முன்னிலை வகித்தார். பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் மணி, பொருளாளர் ரகோத்தமன் ஆகியோர் மாணவர்களுக்கு இலவச பாட நூல்களை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை ஆசிரியர் விஜயகுமார் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். முன்னதாக, 10, பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பண்ருட்டி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜி.பூவராகவமூர்த்தி இலவசப் பாட புத்தகங்களை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.