கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழா

சிதம்பரத்தை அடுத்த கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குஜராத், புதுதில்லி, மும்பை உள்ளிட்ட
Updated on
1 min read

சிதம்பரத்தை அடுத்த கொத்தட்டை கூத்தாண்டவர் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குஜராத், புதுதில்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான திருநங்கைகள் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு கொடியேற்றி, பௌர்ணமி தினத்தில் திருநங்கைகள் திருவிழா நடைபெறும். நிகழ் ஆண்டுத் திருவிழா மே 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தொடர்ந்து அர்ச்சுனன் தபசு, திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், சுவாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
முக்கிய விழாவான திருநங்கைகள் தாலிக் கட்டும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தில்லி, மும்பை, குஜராத், பெங்களூரு, புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான திருநங்கைகள் பங்கேற்று கூத்தாண்டவரை வணங்கி கோயில் பூசாரியின் கைகளால் தாலிக் கட்டிக் கொண்டனர்.
பின்னர் திருநங்கைகளின் கும்மி, தப்பாட்டம், சிலம்பாட்டம், ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான பொதுமக்கள் பங்கேற்று இந்த நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. தேர், மாலை நிலையை அடைந்தவுடன் முதல் நாள் இரவு கட்டிய தாலியை அறுத்தும், வளையல்களை உடைத்தும் திருநங்கைகள் விதவைக் கோலம் பூண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர், அரவான் களப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.  திருவிழாவை முன்னிட்டு, சிதம்பரம் ஏஎஸ்பி என்.எஸ்.நிஷா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com