சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.யில் இருந்து தமிழக அரசின் பல்வேறு கல்லூரிகள், பல்வேறு துறைகளுக்குப் பணி நிரவலில் சென்ற ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம், இதர சலுகைகளை வழங்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், சிஐடியூ மாநிலத் தலைவருமான மூசா பல்கலை. துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது: அண்ணாமலைப் பல்கலை. முன்னாள் நிர்வாகத்தில் ஏற்பட்ட முறைகேடான நிதிமேலாண்மை காரணமாக தமிழக அரசு தலையிட்டு, பல்கலை. நிர்வாகத்தை தனது பொறுப்பில் ஏற்றது. இதனையடுத்து, நிர்வாகத்தைச் சீர்படுத்த உபரி ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோரை அரசின் பல்வேறு துறைகளுக்குப் பணி நிரவல் செய்து வருகிறது. அதே சமயம் பணி நிரவலில் செல்லும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
பணி நிரவலில் செல்லும் ஆசிரியர்கள், ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு காண அலுவலர்கள் குழுவை அமைக்க வேண்டும். தற்போது பணி நிரவலில் சென்றுள்ளவர்கள் மாத ஊதியம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளதால், குடும்ப செலவுக்கும் அவர்கள் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு ஆகியவற்றை உடனடியாக நடைமுறைபப்படுத்த வேண்டும். பல்கலை.யில் 10 ஆண்டுகளாகப் பணிபுரியம் என்எம்ஆர் மற்றும் தொகுப்பூதிய ஊழியர்களைப் பணி நிரந்திரம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் மூசா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.