மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 350 பேர் கைது

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில்
Updated on
1 min read

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 350 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 அதிமுக எம்எல்ஏ. சரவணனின் வீடியோ பேச்சு தனியார் தொலைக்காட்சியில் வெளியானது குறித்து சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினர். இதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதிக்க அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் பேரவையில் அமளியில் ஈடுப்பட்டனர்.
 இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என ராஜாஜி சாலையில் அமர்ந்து முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கடலூர் பாரதி சாலையில், திமுக தேர்தல் பணிக் குழுச் செயலர் இள.புகழேந்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட நகரச் செயலர் ராஜா, மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு, பொதுக் குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் கடலூர் புதுநகர் போலீஸார் கைது செய்தனர். பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே நகரச் செயலர் கே.ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேரையும், நான்கு முனை சந்திப்பில் முன்னாள் கவுன்சிலர் சிவா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேரையும் பண்ருட்டி போலீஸார் கைது செய்தனர். நெல்லிக்குப்பத்தில் அண்ணா சிலை அருகே அவைத் தலைவர் ஷேக் மைதீன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 12 பேரை நெல்லிக்குப்பம் போலீஸார் கைது செய்தனர். நெய்வேலி ஆர்ச் கேட் அருகே சொரத்தூர் ஊராட்சிச் செயலர் சபா.பாலமுருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, தொமுச தலைவர் அரிபெருமாள் உள்ளிட்ட 75 பேரை நெய்வேலி நகர் போலீஸார் கைது செய்தனர்.
 அதேபோல, புதுப்பேட்டை கடை வீதியில் பேரூர் கழகச் செயலர் சுந்தரவடிவேல் தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 18 பேரையும், அங்குசெட்டிப்பாளையத்தில் ஒன்றியச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 24 பேரையும் புதுப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.
 திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மங்களூர் கிழக்கு ஒன்றியச் செயலர் பட்டூர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட திமுகவினர் 24 பேரை திட்டக்குடி போலீஸார் கைது செய்தனர்.
 விருத்தாசலத்தில் நகரச் செயலர் தண்டபாணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 60 பேரை விருத்தாசலம் போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட சுமார் 350 திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com