நெய்வேலியைச் சேர்ந்த மகளிர் மன்றத் தலைவிக்கு சிறந்த சமூக சேவகிக்கான விருது வழங்கப்பட்டது. நெய்வேலியில் செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிநேகா பள்ளி மற்றும் மகளிர் மன்றத்தின் தலைவியாக யோகமாயா ஆச்சார்யா செயல்பட்டு வருகிறார்.
மகளிர் மன்றத்தின் மூலம், சமூகத்தின் அடித்தட்டு மக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பல்வேறு நலப் பணிகளையும், சுகாதாரப் பணிகளையும் செய்து வருகின்றனர்.
பெண்களுக்கு கைத்தொழில் பயிற்சி அளித்தும், கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் செயல்பட்டு வரும் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்பிற்கும், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார். இவரின் சேவையை பாராட்டி, ஓடிஸா மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ஸ்ரீஷேத்ரா சூச்சனா கலாசார தன்னார்வ அமைப்பு சிறந்த சமூக சேவகிக்கான விருதை வழங்கியுள்ளது.
கடந்த 15-ஆம் தேதி ஒடிசா மாநிலம், பூரி நகரில் நடைபெற்ற நாட்டுப்புற கலை மற்றும் விவசாய விழாவில், அந்த மாநில விவசாயத் துறை அமைச்சர் தாமோதர் ரவுத் விருதை யோகமாயா ஆச்சார்யாவிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒடிசா மாநில விவசாயத் துறை செயலர் எஸ்.கே.பட்நாயக், தேசிய அனல்மின் நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் பிஸ்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.