வெய்யலூர் கிராமத்தில் மயான வசதி செய்து தரக் கோரிக்கை

வெய்யலூர் கிராமத்தில் மயான வசதி செய்து தரப்பட வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
Updated on
1 min read

வெய்யலூர் கிராமத்தில் மயான வசதி செய்து தரப்பட வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
 சிதம்பரம் வட்டம், வெய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட பொதுமக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலர் சு.திருமாறன் தலைமையில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 அந்த மனுவில், இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் இனத்தவர்கள் வீராணம் ஏரிக்கரையில் இறந்தவர்களை அடக்கம் செய்து வந்தனர். கடந்த 30 ஆண்டுகளாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
 இந்த நிலையில், வீராணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுமென அரசு இந்த மயானத்தை அகற்றிவிட்டது. அதனைத் தொடர்ந்து ஏரிக்கரையின் கீழ்பகுதியில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் தாற்காலிக மயானம் கொடுக்கப்பட்டது.
 ஆனால், தற்போது சாலை விரிவாக்கப் பணிக்காக அந்த மயானத்தை மண்வெட்டி போட்டு மூடிவிட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் ஆதிதிராவிடர் தனி வட்டாட்சியர் விசாரணை நடத்தினார். அதில், அந்த கிராமத்தில் உள்ள 1.63 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் 63 சென்ட் இடம் மயானத்துக்கு தருவதாக கூறப்பட்டது. ஆனால், அந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானது எனகூறி இடம் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது.
 எனவே கிராம நிர்வாக அலுவலகம் மூலமாக, அரசு புறம்போக்கு நிலமென கூறப்பட்ட நிலத்தை மீண்டும் அளவீடு செய்து, உரிய விசாரணை நடத்தி சுடுகாடு, இடுகாட்டுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com