புகழ் பெற்ற சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள தில்லைக்காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே 16-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. உற்சவ மூர்த்தியான தில்லை அம்மன் கோயிலிருந்து புறப்பட்டு, வடக்கு சன்னதி எதிரே உள்ள தேரில் ஏறி, நான்கு வீதிகளில் வலம் வந்தார். பின்னர், மீண்டும் தேர் வடக்கு சன்னதி நிலையை அடைந்ததது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தில்லைக் காளியம்மனை தரிசித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (மே 25) சிவப்பிரியையில் தீர்த்தவாரி, வெள்ளிக்கிழமை (மே 26) மஞ்சள் நீர் விளையாட்டு, முத்துப் பல்லக்கு வீதி உலா, சனிக்கிழமை (மே 27) தெப்பல் உற்சவம், ஞாயிற்றுக்கிழமை (மே 28) திரு ஊஞ்சல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சி.ஜோதி, கோயில் செயல் அலுவவர் க.முருகன் ஆகியோர் செய்துள்ளனர்.
ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும், ஸ்ரீ பார்வதி தேவிக்கும் ஏற்பட்ட நடனப் போட்டியில், நடராஜப் பெருமான் ஊர்தவ தாண்டவத்தை ஆட முடியாமல் ஸ்ரீ பார்வதி வெகுண்டு சிதம்பரம் வடதிசை எல்லையில் ஸ்ரீ எல்லைக்காளி என்னும் தில்லைக்காளியாக வீற்றுள்ளார் என்று தல வரலாறு கூறுகிறது. ஸ்ரீ பிரம்மன், ஸ்ரீ தேவியை பூஜிக்க, ஸ்ரீ பார்வதி, பிரம்மனின் பூஜைக்கு மனமுவந்து சினம் தணிந்து உலக உயிர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் நோக்கத்துடன் ஸ்ரீ பிரம்ம சாமுண்டீஸ்வரி ஸ்ரீ தில்லையம்மன் என்ற திருப்பெயருடனும் இந்தக் கோயிலில் வீற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.