கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், இந்தித் திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரியும் சிறப்புக் கருத்தரங்கு கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கருத்தரங்கில் பங்கேற்ற கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: நீட் தேர்வு தமிழகத்துக்குத் தேவையில்லாத ஒன்றாகும். அண்மையில், பிரதமரை தமிழக முதல்வர் சந்தித்து பேசிய போது, தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை எனக் கூறவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் இருந்திருந்தால் இப்படியொரு நிலை வந்திருக்காது என்றார் அவர்.
கட்சியின் தேர்தல் பணிக் குழு செயலர் கம்பம் பெ.செல்வேந்திரன் பேசியதாவது: இந்தியாவில் இந்தி மொழி பேசாதவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். இந்தியாவில் 1,652 மொழிகள் பேசப்படுகிறது. இதில் 16 மொழிகள் அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. எனவே, எல்லா மொழியினருக்கும் இந்தியாவில் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார்.
கருத்தரங்கில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கல்லூரி, பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மாநில மாணவரணிச் செயலர் இள.புகழேந்தி, சட்டப்பேரவை உறுப்பினர் துரை.கி.சரவணன், மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் பி.பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.