வீடுகளில் கருப்புக் கொடி கட்டி மாட்டு வண்டித் தொழிலாளர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் மணிமுக்தாறு, வெள்ளாற்றில் இயங்கி வந்த மணல் குவாரிகள் மூடப்பட்டதால், மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி வந்தோர்களின் தொழில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மணிமுக்தாறு, வெள்ளாறில் இருந்து மணல் எடுத்து வரும் மாட்டு வண்டிகளைக் காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்வதுடன், ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பதால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாட்டு வண்டித் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரை சந்தித்து மணல் குவாரிகளைத் திறந்து மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என மனு அளித்தனர்.
எனினும், மணல் அள்ளிச் செல்லும் மாட்டு வண்டித் தொழிலாளர்களை கைது செய்வது தொடர்ந்தது. குறிப்பாக, செவ்வாய்க்கிழமை ராமச்சந்திரன் பேட்டையைச் சேர்ந்த 6 பேரின் மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதனைக் கண்டித்து, மாட்டு வண்டித் தொழிலாளர்களை வஞ்சிக்கும் காவல் துறையின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை விடுவித்தல், மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மீது பதிவு செய்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருத்தாசலம் ராமச்சந்திரன் பேட்டை, காந்தி நகர், நாச்சியார்பேட்டை, பெரியகண்டியாங்குப்பம், பட்டி, பரூர், மணலூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாட்டு வண்டித் தொழிலாளர்கள் தங்களது வீடுகளில் புதன்கிழமை கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.