மாணவி அனிதா தற்கொலை விவகாரம்: கடலூர் மாவட்டத்தில் 3-ஆவது நாளாகப் போராட்டம்

மாணவி அனிதா தற்கொலை விவகாரம் தொடர்பாக, கடலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து 3-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on
Updated on
1 min read

மாணவி அனிதா தற்கொலை விவகாரம் தொடர்பாக, கடலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து 3-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி அனிதா. நீட் தேர்வால் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 இந்த நிலையில், எஸ்.குமாரபுரத்தில் உள்ள கிருஷ்ணசாமி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகள் 2-ஆவது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்லங்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 200 பேர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்த நிலையில், கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கம், மஞ்சக்குப்பம் மைதானம் அருகே மாணவர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த உள்ளதாக முகநூலில் தகவல் பரவியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அண்ணா விளையாட்டு அரங்கம், மஞ்சக்குப்பம் மைதானம், வெள்ளிக் கடற்கரை உள்ளிட்ட முக்கியப் பொது இடங்களில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் கடலூரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நெய்வேலியில் ஜவஹர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வாயில் முன் கூடிய 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவி அனிதாவின் இறப்புக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டபடி கடை வீதி வரையில் பேரணியாகச் சென்று கலைந்து சென்றனர்.
 அதேபோல, நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் சார்பில், நெய்வேலி ஆர்ச் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 அந்தக் கட்சியின் குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலர் கோவேந்தன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் துரை.மருதமுத்து, தொகுதிச் செயலர் அ.உ.அதியமான், துணைச் செயலர் பாஷாபன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கடலூர் நாடாளுமன்றத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலர் ஜெ.குணவழகன், மாவட்டச் செயலர் பெ.கருப்புசாமி ஆகியோர் பேசினர். மாநில நிர்வாகிகள் அன்பழகன், குரு, திருவாதிரை, அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com