கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின்னல் பாய்ந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்தது. புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி (24 மணி நேரத்தில்) அதிகபட்சமாக வேப்பூரில் 100 மி.மீ. மழை பதிவானது.
அதேபோல, குப்பநத்தத்தில் 85.60, கீழசெருவாயில் 77, காட்டுமைலூரில் 75, விருத்தாசலத்தில் 68, லக்கூரில் 66, தொழுதூரில் 54, மே.மாத்தூரில் 50, லால்பேட்டில் 10, புவனகிரி, சேத்தியாதோப்பில் 9, ஸ்ரீமுஷ்ணத்தில் 5, காட்டுமன்னார்கோவிலில் 2, கடலூரில் 1.80, பண்ருட்டியில் 1 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் மொத்தம் 616.40 மி.மீ. மழையும், சராசரியாக 29.35 மி.மீ. பதிவானது.
மேலும், விருத்தாசலம், அதன் சுற்று வட்டப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோ.பொன்னேரி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் புனிதா (24), பிரியதர்ஷினி (19), கெளசல்யா (16), கண்ணையன் (60), ராஜதுரை (25) உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.