Enable Javscript for better performance
கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் மீன்பிடித் தொழில் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் மீன்பிடித் தொழில் பாதிப்பு

    By கடலூர்  |   Published on : 01st December 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை, கடல் சீற்றம் காரணமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு, சுமார் ரூ.50 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    இந்த மாவட்டத்தின் முக்கியத் தொழில்களில் ஒன்றாக விளங்கி வருவது மீன்பிடித் தொழிலாகும். இங்கு வங்கக் கடலோரத்தில் 49 மீனவக் கிராமத்தினர் முதன்மைத் தொழிலாக மீன்பிடித்தலை மேற்கொண்டு வருகின்றனர்.
    மேலும், பல கிராம மக்களும் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
    மாவட்டத்தில் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கும் படகுகள், எஸ்வி படகுகள் உள்ளிட்ட சுமார் ஆயிரம் விசைப் படகுகளும், கட்டுமரம், பைபர் படகுகள் சுமார் 20 ஆயிரம் வரையிலும் உள்ளன. இவற்றின் மூலமாக சுமார் 40 ஆயிரம் பேர் நேரடியாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன் வியாபாரம், கட்டுமரம் தயாரித்தல், பழுது நீக்கம், ஐஸ் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலமாக சுமார் 30 ஆயிரம் பேர் வருவாய் ஈட்டி வருகின்றனர். வடகிழக்குப் பருவமழை அக்.27-ஆம் தேதி தொடங்கியதை அடுத்து, மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருவதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
    சிலர் கட்டுமரங்களில் சென்று கரையோரமாக மீன்பிடித்து வந்தபோதிலும், கடந்த சில நாள்களாக அவர்களும் கடலுக்குள் செல்ல முடியாத வகையில் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால், மீன்பிடித் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மீன்பிடித் தொழிலை நம்பி சுமார் 80 ஆயிரம் பேர் உள்ளனர்.
    கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை ஆகியவை முக்கிய மீன்பிடித் தளங்களாகும். இங்கு நாளொன்றுக்கு சுமார் ரூ.5 கோடி வரை மீன் வர்த்தகம் நடைபெறும். ஏற்கெனவே, மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 நாள்களாக முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், சுமார் ரூ.50 கோடி வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
    எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    குறிப்பாக, மீனவர்களுக்கான கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக கடனுதவி வழங்கி, அதை மீன்பிடிக் காலத்தில் பிடித்தம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மீன்பிடித் துறைமுகத்தின் முகத்துவாரம் ஆழப்படுத்தப்படாததால் கடல் அலையின் சீற்றம் அதிகமாகி அடிக்கடி படகுகள் கவிழும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதனால், உயிரிழப்புகளும், படகுகள் சேதமும் தொடர்வதால், இந்தப் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.















     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai