Enable Javscript for better performance
அரசு சார்பில் 2,840 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு- Dinamani

சுடச்சுட

  

  அரசு சார்பில் 2,840 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

  By  கடலூர்/சிதம்பரம்/நெய்வேலி,  |   Published on : 02nd December 2017 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 2,840 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
   தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சத்தான உணவை உட்கொண்டு தாயும், சேயும் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி பெறும் பெண்களில், வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திட முடியாத பெண்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு அரசு சார்பில் வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.
   அதன்படி, கடலூர் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் வெள்ளிக்கிழமை 2,840 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், கடலூர் நகர அரங்கில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தொடக்கி வைத்து சீர்வரிசைப் பொருள்களை வழங்கினார்.
   அப்போது ஆட்சியர் பேசியதாவது: பெண்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை ஆண், பெண் பாகுபாடின்றி சமமாகக் கருதவேண்டும். பெண்கள் தற்போது அனைத்துத் துறைகளிலும் சாதித்து வருவதால், பிறக்கும் பெண் குழந்தைகளை நன்றாக படிக்கவைக்க வேண்டும். ஒரு குழந்தையின் வளர்ச்சி அக்குழந்தை தாயின் கருவில் உருவாகும்போதே தொடங்கிவிடுகிறது. ஒரு குழந்தை ஆரோக்கியமான, அறிவுத்திறன் மிக்கதாக உருவாக, அதன் கர்ப்பிணித் தாய்க்கு கர்ப்பமான நாளிலிருந்து சிறப்பு கவனம் அளிக்க வேண்டும்.
   இதனை கருத்தில்கொண்டே அரசு பல்வேறு நலத் திட்டங்களை கர்ப்பிணிகளுக்கு வழங்கி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் ரூ.12,000 வழங்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவிக்கும் கர்ப்பிணிகளுக்கு கூடுதலாக ரூ.750 வழங்கப்படுகிறது என்றார் அவர். நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் "கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு, குழந்தைகளுக்கு ஆரோக்கிய பூரிப்பு' என்ற கையேடு வெளியிடப்பட்டது. விழாவில் நலப் பணிகள் இணை இயக்குநர் எஸ்.மாதவி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
   முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் டி.பழனி வரவேற்றார். கடலூர் நகர்ப்புற குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மோனிஷா நன்றி கூறினார்.
   சிதம்பரம்: சிதம்பரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவுக்கு, எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் தலைமை வகித்தார். பரங்கிப்பேட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அனிதாசெந்தில் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் துணைத் தலைவர் செந்தில்குமார், நகர வங்கித் தலைவர் சொ.ஜவகர், தலைமைக் கழகப் பேச்சாளர் தில்லைகோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   சிறப்பு விருந்தினராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்று பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி வட்டாரங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் சீர்வரிசைப் பொருள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
   விழாவில் அதிமுக ஒன்றியச் செயலர்கள் ஜெயபாலன், சிவப்பிரகாசம், அசோகன், அவைத் தலைவர்கள் கோ.வி.ராசாங்கம், சுந்தரமூர்த்தி, ஏ.கே.எஸ்.சேகர், வேனு.புவனேஸ்வரன், நிர்வாகிகள் மார்கெட் கே.நாகராஜன், வீரமணி, இளைஞரணிச் செயலர் கருப்பு ராஜா, உமாசங்கர், மாணவரணி சங்கர், மார்கெட் ரமேஷ், விநாயகம், ஜெயசீலன், சொக்கநாதன், சுந்தரம், செல்வகணபதி, செல்வரங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   காடாம்புலியூர்: பண்ருட்டி, அண்ணாகிராமம் ஒன்றியங்களைச் சேர்ந்த சுமார் 500 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா காடாம்புலியூரில் நடைபெற்றது.
   மாவட்ட குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பழனி தலைமை வகித்தார். வட்டார திட்ட அலுவலர்கள் பண்ருட்டி மனோசித்ரா, அண்ணாகிராமம் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கத் தலைவர் ராமசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் காடாம்புலியூர் கி.தேவநாதன், என்.டி.கந்தன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். ஆவின் துணைத் தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கல்யாணசுந்தரம், ஞானப்பிரகாசம், துணைத் தலைவர் சரவணன், அக்ரோ தலைவர் கருணாநிதி, முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர்கள் வடிவேல், ஏழுமலை புருஷோத்தம்மன், கம்சலிங்கம், தேவி மாணிக்கவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மருங்கூர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சாயிராபானு தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஜான்சிராணி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். இதில், நிகழ்ச்சியில் 241 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். அதிமுக நகரச் செயலர் ஆனந்தபாஸ்கர், நகர பாசறை செயலர் வசந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   11 வகையான சீர்வரிசை பொருள்கள் விநியோகம்
   விழாவில், கர்ப்பிணிகளுக்கு புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், மாலை, இனிப்பு, காரம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தட்டு ஆகிய 11 வகைப் பொருள்களும், சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் ஆகிய 5 வகையான உணவும் வழங்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai