சுடச்சுட

    

    புதுச்சேரியிலிருந்து காரில் மதுபானம் கடத்தியது தொடர்பாக இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர்.
     புதுச்சேரியிலிருந்து மதுபானம் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் கடலூர் ஆல்பேட்டையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து காரில் மதுபானம் கடத்தி வரப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மீனாம்பிகை, காவலர்கள் முருகேசன், ரமேஷ்குமார், முத்துக்குமரன், நேரு ஆகியோர் சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
     வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் அந்த வழியாக வந்த காரை போலீஸார் வழிமறித்தனர். ஆனால், கார் நிற்காமல் சென்றது. இருப்பினும், சிறிது தூரத்திலேயே அந்தக் காரை காவல் துறையினர் மடக்கினர். காரை சோதனையிட்டபோது, புதுச்சேரி மதுபானங்கள் கொண்ட பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கார் ஓட்டுநரான புதுச்சேரி, சுருளியான்குப்பத்தைச் சேர்ந்த வெங்கடேசப்பெருமாள் மகன் சிலம்பரசன் (29) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
     அவரிடம் நடத்திய விசாரணையில், நெய்வேலி அருகே உள்ள இந்திராநகர் மாற்றுக் குடியிருப்பைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (32) என்பவருக்காக மதுப் புட்டிகளை கடத்திச் செல்வதாகக் கூறினாராம். தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வரும் மணிகண்டன், அந்த வண்டியில் மதுப் புட்டிகளை மறைத்து வைத்து வியாபாரம் செய்வதும் தெரிய வந்ததாம். இதையடுத்து மணிகண்டனையும் போலீஸார் கைது செய்தனர்.
     தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திடம் காரை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் சிலம்பரசன், இதுபோல ஒருமுறை மதுபானங்களை மாற்றிக் கொடுத்தால் ரூ.10 ஆயிரம் வரை பங்குத்தொகை பெற்றுக்கொள்வாராம். காரில் 17 அட்டைப் பெட்டிகளில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 800 மதுப் புட்டிகளையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai