சுடச்சுட

    

    குமரி, கேரள கடலில் மீன்பிடிக்கச் சென்ற கடலூர் மீனவர்கள் 13 பேர் மாயம்

    By DIN  |   Published on : 04th December 2017 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரிலிருந்து கன்னியாகுமரி, கேரள மாநிலத்துக்கு மீன்பிடிக்கச் சென்ற 13 மீனவர்கள் மாயமாகினர்.
    கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களில் நூற்றுக்கணக்கானோர் கன்னியாகுமரி, கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கூலிக்கு மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆழ்கடலில் 15 முதல் 30 நாள்கள் வரை தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு, கூலியுடன் சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம். அதன்படி கடந்த சில வாரங்களில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர் கன்னியாகுமரி, கேரளம் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் வெவ்வேறு படகுகளில் சென்று ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து வந்தனர்.
    இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான ஒக்கி புயலால் கன்னியாகுமரி கடும் பாதிப்பைச் சந்தித்தது. அங்கு, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகுகளை வெவ்வேறு பகுதிகளுக்கு புயல் திசை திருப்பியது. இதில் மாயமான மீனவர்களை தேடும் பணியில் கடலோரக் காவல்படையினர், மீன் வளத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
    இந்த நிலையில், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்திலிருந்து இவ்வாறு மீன்பிடிக்கச் சென்ற சுமார் 200 மீனவர்கள் குறித்த விவரம் கிடைக்கவில்லையென தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் வாழ்வுரிமை இயக்க நிறுவனத் தலைவர் பெரு.ஏகாம்பரம் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், ராசாப்பேட்டை பகுதிகளிலிருந்தும், விழுப்புரம் மாவட்டத்தில் முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம், கூனிக்குப்பம் பகுதிகளிலிருந்தும், புதுச்சேரியில் தவளக்குப்பத்தில் இருந்தும் கூலிக்காக மீன்பிடிக்க கன்னியாகுமரிக்கும், கேரள மாநிலத்துக்கும் சென்ற 200 மீனவர்கள் குறித்த தகவல் கிடைக்கவில்லை. புயலால் அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் குறித்த விவரத்தை தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்றார்.
    இதுகுறித்து மீன்வளத் துறை துணை இயக்குநர் கே.செல்வன் கூறியதாவது: கடலூர் மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி, கேரளத்துக்கு மீன்பிடிக்கச் சென்ற 21 பேர் குறித்த தகவல் கிடைக்கவில்லையென அவர்களது குடும்பத்தினர் மீன்வளத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டு
    நடத்தப்பட்ட விசாரணையில், தேவனாம்பட்டினம் மீனவர்கள் 3 பேர், சோனாங்குப்பம் மீனவர்கள் 5 பேர் பல்வேறு பகுதிகளில் பத்திரமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ராசாப்பேட்டையைச் சேர்ந்த 6 பேர், பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூரைச் சேர்ந்த 7 பேர் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai