சுடச்சுட

    

    தன்னார்வலர்களின் முயற்சியால் பழைமையான பாலம் சீரமைப்பு

    By DIN  |   Published on : 04th December 2017 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் பழைமையான பாலம் தன்னார்வலர்களின் முயற்சியால் ஞாயிற்றுக்கிழமை சீரமைக்கப்பட்டது.
    கடலூர் - புதுச்சேரி சாலையில் ஆல்பேட்டையில் தென்பெண்ணையாற்றின் மீது பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் அருகிலேயே சிதிலமடைந்து, செடிகள் வளர்ந்த நிலையில் தொங்கும் தோட்டமாக மற்றொரு பாலம் காணப்பட்டது. போக்குவரத்துக்கு கைவிடப்பட்ட இந்தப் பாலத்தை, நடந்து செல்வோர் கூட பயன்படுத்தாமல் இருந்தனர்.
    1888-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டுமானப் பணி தொடங்கப்பட்ட இந்தப் பாலம், 1891-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
    நூற்றாண்டைக் கடந்த இந்தப் பாலத்தை, கடலூரின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக மாற்றிட கடலூர் சிறகுகள் அமைப்பினர் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தங்களது குழு நண்பர்கள், மற்ற சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்து பாலத்தை சீரமைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
    இந்தப் பணியில் கடலூர் சிறகுகள், நம்ம கடலூர், அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம், நெல்லிக்குப்பம் இளைஞர்கள் மற்றும் பல்வேறு பொது நல சங்கத்தினர், மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என சுமார் 120 பேர் பங்கேற்றனர். இவர்கள், பாலத்தின் இரு கரைகளிலும் வளர்ந்திருந்த புல் பூண்டுகளையும், மரங்களையும் அப்புறப்படுத்தினர்.
    சுமார் 500 மீட்டர் வரை இந்தப் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பல்வேறு அமைப்பினரும் உணவு, குடிநீர், சிற்றுண்டி வழங்கினர்.
    இளைஞர்களின் தீவிர உழைப்பால் தற்போது இந்தப் பாலம் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும் ஏற்ற வகையில் மாறியதுடன், பேருந்தில் அப்பகுதியைக் கடப்பவர்களின் கண்களையும் கவர்ந்து வருகிறது.
    இதுகுறித்து கடலூர் சிறகுகள் அமைப்பு நிர்வாகிகளில் ஒருவர் கூறுகையில், கடலூரின் வரலாற்று சின்னமாக விளங்க வேண்டிய இந்தப் பாலம் புதர்மண்டிக் கிடந்ததை தற்போது சீரமைத்துள்ளோம். இதில் மேலும் பல பணிகள் செய்ய வேண்டியுள்ளது. அதன் பின்னர் தொடர்ந்து பராமரித்து கடலூரின் வரலாற்றை விளக்கும் வகையில் பாலத்தை மாற்றுவோம் என்றார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai