சுடச்சுட

  

  தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால், கடலூர் மற்றும் கிராமப் பகுதிகளில் சூழ்ந்திருந்த மழைநீர் வடியத் தொடங்கியது.
  கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கே.ஆர்.பி. அணையின் மதகு உடைந்ததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையை வந்தடைந்தது. இந்த அணை ஏற்கெனவே நிரம்பியிருந்த நிலையில், உபரிநீர் தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டது. சுமார் 35 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் வந்ததால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு தரைப் பாலங்கள் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
  ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால்
  ஆற்றுக்கான நீர் வரத்து அதிகரித்ததோடு, வடிகால் வாய்க்கால்கள் வழியாகவும் வெள்ளநீர் ஊருக்குள் புகும் நிலை உருவானது. இதனால், கடலூர் நகரில்
  ஆற்றங்கரையை ஒட்டியுள்ள செம்மண்டலம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, எம்ஜிஆர் நகர், ஆல்பேட்டை, சுனாமி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், நகரைச் சுற்றியுள்ள பெரியகங்கணாங்குப்பம், சாவடி, உப்பலவாடி உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றனர்.
  இந்த நிலையில், கடலூர் மாவட்டம் மட்டுமின்றி மற்றப் பகுதிகளிலும் மழை ஓய்ந்ததால், ஆற்றில் நீர் வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை கிராமப் பகுதிகளில் சூழ்ந்திருந்த தண்ணீர் முற்றிலுமாக வடிந்து குறைந்த நிலையில், நகரப் பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீரை வடிய வைக்க முயற்சி எடுக்கப்பட்டது.
  மேலும், தென்பெண்ணையாறு கடலில் கலக்கும் தாழங்குடா, தேவனாம்பட்டினம் முகத்துவாரங்களை பொதுப் பணித் துறையினர் சீரமைத்து தண்ணீர் விரைந்துச் சென்று கடலில் கலக்கும் ஏற்பாட்டைச் செய்தனர். இதனால், தேங்கியிருந்த தண்ணீர் விரைவாக வடிந்தது. வெள்ளம் தொடர்பான அச்சம் நீங்கியதைத் தொடர்ந்து பொதுமக்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai