Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கு விருது அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சேவை விழிப்புணர்வு பணியாற்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே விருது வழங்கினார்.
    உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கடலூரில் உள்ள பார்வையற்றோர் அரசுப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாற்றுத் திறனாளிகள் லட்சிய முன்னேற்ற சங்கத் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமை வகித்தார். பொதுச் செயலர் பொன்.சண்முகம், பொருளாளர் எம்.தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் பாஸ்தரோ அந்தோணி செல்வி வரவேற்றார்.
    மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டார். மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இனிப்புகள், நலத்திட்ட உதவிகள், உபகரணங்களையும் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள், தொழுநோயிலிருந்து மீண்டவர்கள் பலர் சேவை மற்றும் விழிப்புணர்வுப் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சேவைப் பணிகளை பாராட்டிய ஆட்சியர் விருது வழங்கி சிறப்பித்தார்.
    மேலும் தொழுநோய் தடுப்பு குறித்த துண்டறிக்கையை வெளியிட்டு, ஜனவரி 30-ஆம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்ளும் பிரசாரப் பயணத்தை ஆட்சியர் தொடக்கி வைத்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன், எப்சிபா தவராஜ், சத்தியநாராயணன், மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் பாலமுருகன், பச்சமுத்து, தில்லைநாயகம், தனுஷ்பத்மா, ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஜெயபாலன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai