சுடச்சுட

  

  குறிஞ்சிப்பாடி பகுதியில் சுமார் 500 ஏக்கரில் விதைப்பு செய்திருந்த மணிலா பயிர்கள், வடிகால் வசதியின்றி நீரில் மூழ்கி சேதமடைந்தன.
  குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, ராஜாகுப்பம், நெத்தனாங்குப்பம், பொன்வெளி, வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை, மீனாட்சிப்பேட்டை, கண்ணாடி, ஆடூர் அகரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் கார்த்திகை பட்ட மணிலா விதைப்பு செய்துள்ளனர்.
  இந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த தொடர் மழையால் குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் விதைப்பு செய்யப்பட்டுள்ள மணிலா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
  இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது: இந்தப் பகுதியில் விவசாயிகள் தற்போது சுமார் 1,500 ஹெக்டேர் பரப்பளவில் மணிலா சாகுபடி செய்துள்ளனர்.
  செங்கால் ஓடைக் கரை உயர்த்தப்பட்டதால், குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் தேங்கும் மழை நீர் வடிய வழியின்றி தேங்கி நிற்கின்றது.
  இதனால், இந்தப் பகுதியில் சுமார் 500 ஏக்கரில் விதைப்பு செய்த மணிலா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. கடந்த இரு ஆண்டுகளாக இந்தப் பிரசனை தொடர்கிறது.
  வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பல முறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
  வேளாண்மைத் துறை மணிலா விதை வழங்காத நிலையில், விவசாயிகள் வெளிச் சந்தையில் 40 கிலோ எடை கொண்ட மூட்டையை ரூ.3,200-க்கு விலைக்கு வாங்கி விதைப்பு செய்தனர்.
  ஏக்கருக்கு 3 மூட்டைகள் விதை மணிலா தேவை. விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்திருந்த நிலையில் அனைத்தும் நாசமாகிவிட்டது. ஊடு பயிராக நடவு செய்த மரவள்ளியும் அழுகிவிட்டது.
  இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அரசு கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், சாகுபடி செய்வதற்கு கடன் வசதி செய்து, விதை, உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  வடிகால் வசதியும் அமைத்துத்தர வேண்டும் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai