சுடச்சுட

    

    கடலூரில் தென்பெண்ணையாற்றில் உள்ள தரைப்பாலம் மண் அரிப்பால் சேதமடைந்ததால் தண்ணீர் வீணாகி கடலில் கலக்கிறது.
     கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே தென்பெண்ணையாறு செல்கிறது. இந்த ஆற்றின் ஒருபகுதி கடலூர் மாவட்டத்துக்கும், மற்றொரு பகுதி புதுச்சேரியின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. இப்பகுதியின் குடிநீர் தேவைக்கும், நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்காகவும் புதுச்சேரி அரசால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது.
     எனினும், பல்வேறு காரணங்களுக்காக இந்தத் தரைப் பாலத்தைப் பயன்படுத்த முடியாத வகையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் பெரிய அளவில் பள்ளம் தோண்டி அண்மையில் தாற்காலிக தடையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தென்பெண்ணையாற்றில் சுமார் 35 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இந்தத் தரைப்பாலம் மூழ்கடிக்கப்பட்டு, 3 நாள்களுக்கும் மேலாக தண்ணீர் சென்றது. தற்போது ஆற்றில் தண்ணீர் குறைந்த நிலையில், தரைப்பாலத்தின் இருபகுதியிலும் மண்அரிப்பால் அந்தப் பாலம் உடையும் நிலை ஏற்பட்டது. மேலும், தடுப்பணையில் தண்ணீர் தேங்காமல் உடைப்பின் வழியாக வெளியேறியது. இதனால், தடுப்பணை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் கேள்விக்குறியானது.
     இதையடுத்து, பாலத்தின் ஒருபகுதியை சரிசெய்யும் பணியில் புதுச்சேரி அரசு திங்கள்கிழமை ஈடுபட்டது. இதற்கிடையே, கடலூர் பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பால் ஆட்சியர் அலுவலகம் முன்புறம் உள்ள சாலை சேதமடையும் நிலை உருவானதைத் தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத் துறையினர் மண் அரிப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கெனவே வெட்டப்பட்ட பள்ளத்தால் ஏற்பட்ட மண் அரிப்பில், சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் உருவாக்கி அதில் மண்மூட்டை, கிராவல் கொண்டு நிரப்பும் பணி நடைபெற்றது. சாலையை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத் துறை சார்பில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளைக் கொண்டு மண் அரிப்பை தடுக்கும் பணி நடைபெற்று வருவதாக நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் எஸ்.கந்தசாமி கூறினார்.
     எனவே, தரைப் பாலத்தை சீரமைப்பதோடு, தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் தேக்கும் வகையில் இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai