Enable Javscript for better performance
பயிர்க் காப்பீட்டுத் தொகை கோரி டிச.11-இல் விவசாயிகள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பயிர்க் காப்பீட்டுத் தொகை கோரி டிச.11-இல் விவசாயிகள் போராட்டம்

    By  சிதம்பரம்  |   Published on : 05th December 2017 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயிர்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கக் கோரி, அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் வருகிற 11-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
     இதுதொடர்பாக பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள் பெ.ரவீந்திரன், எம்.நீலமேகம், ஜெய.சஞ்சீவி. யு.கே.ராஜேந்திரன், எஸ்.அருள்பிரகாசம், பி.உமாபரமேஸ்வர குமரன், என்.முனுசாமி, எஸ்.சிற்றரசு ஆகியோர் சிதம்பரம் கோட்டாட்சியர் சி.ராஜேந்திரனிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: 2016-ஆம் ஆண்டு காவிரி தண்ணீர் கிடக்காமலும், வடகிழக்கு பருவ மழை பொய்த்ததாலும் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் பலர் மாரடைப்பாலும், தற்கொலை செய்தும் உயிரிழந்தனர். இந்த நிலையில் பயிர்க் காப்பீட்டு திட்ட இழப்பீட்டு தொகையும் பெரும்பாலான விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்காமல் அவர்கள் விரக்தியில் உள்ளனர்.
     கடலூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 914 ஏக்கர் விளை நிலங்களுக்கு, 71 ஆயிரத்து 241 விவசாயிகள், 5 கோடியே 79 லட்சம் ரூபாய் பிரீமியம் செலுத்தி இணைந்துள்ளனர்.
     இதனால் ரூ.383 கோடிக்கு இழப்பீடு கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் நெல் சாகுபடி விவசாயிகள் மட்டும் 60 ஆயிரம் பேர் அடங்குவர்.
     இவர்களில் 32 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே இழப்பீடு கிடைக்கும் எனக் கணக்கிட்டு, இதுவரை 30 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.91 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதாகவும், எஞ்சியவர்களுக்கு 30-11-2017 தேதிக்குள் வழங்கப்படும் எனவும் தனியார் காப்பீட்டு நிறுவனம் மூலம் அறிவிக்கப்பட்டது. ஆனால் காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், புவனகிரி ஆகிய ஒன்றியங்களைச் சார்ந்த சுமார் 2,000 விவசாயிகளுக்கு இது நாள் வரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.
     புதிய பயிர்க் காப்பீட்டு திட்ட வழிகாட்டுதலின்படி, மாநில அரசு இயற்கைப் பேரிடர் நிவாரணம் அறிவிப்பு செய்த நாளிலிருந்து 90 நாள்களுக்குள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை. மேலும் பல கிராமங்களில் வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையிலும், பெரும்பாலான விவசாயிகளுக்கு பாக்கி உள்ளது.
     இதனால், குறைந்த இழப்பீட்டுத் தொகை பெற்ற விவசாயிகள் எஞ்சிய தொகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். எஞ்சிய விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்குவதில் தனியார் நிறுவனம் காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல.
     எனவே, டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் 2016-17-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை திட்டத்தில் இணைந்த எஞ்சிய விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் டிசம்பர் 11-ஆம் தேதி (திங்கள்கிழமை) சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai