சுடச்சுட

    

    மாயமான மீனவர்களை மீட்கக் கோரி உறவினர்கள் ஆட்சியரிடம் மனு

    By  கடலூர்,  |   Published on : 05th December 2017 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒக்கி புயலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி அவர்களது உறவினர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பாரி வைத்து மனு அளித்தனர்.
     கடலூர் அருகே உள்ள ராசாப்பேட்டையிலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜு, சுகுமார், புலேந்திரன், முருகன், முருகேசன் ஆகிய 5 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கன்னியாகுமரி சென்றுள்ளனர். அண்மையில் வீசிய ஒக்கி புயலுக்குப் பின்னர் 5 பேரையும் அவர்களது குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியவில்லையாம். எனவே, அவர்களை மீட்டுத் தரக் கோரி அவர்களது உறவினர்கள் திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது ஊர்த் தலைவர் குப்புசாமி தலைமையில் பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாயமான மீனவர்கள் குறித்த நிலை தெரியாததால் அவர்கள் குறித்த விவரங்களை விசாரித்து மீட்டுத்தர வேண்டுமென ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கூறயதாவது: கடலூர் மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரிக்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காகச் சென்றவர்களில் 24 பேரை காணவில்லையென புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த விவரங்களை மீட்புக் குழுவினருக்கு தெரிவித்துள்ளோம். இதில், 10 பேர் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எஞ்சியவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் மீன்வளத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai