சுடச்சுட

  

  என்எல்சி சுரங்கத்தில் மத்திய தொழிலாளர் நல ஆணையர் ஆய்வு

  By DIN  |   Published on : 09th December 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன சுரங்கத்தில் மத்திய துணை முதன்மை தொழிலாளர் நல ஆணையர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து தொழிலாளர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
  என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் சிஐடியு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர், சம வேலைக்கு சம ஊதியம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 5 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெற்று, மத்திய துணை முதன்மை தொழிலாளர் நல அணையரிடம் மனுவாக அளித்தனர் .
  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மத்திய துணை முதன்மை தொழிலாளர் நல ஆணையர் வி.சீனுவாசன் நெய்வேலிக்கு வந்தார். அவர் என்எல்சி சுரங்கப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது, நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களிடம் ஊதியம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், வட்டம் 25-இல் உள்ள விருந்தினர் இல்லத்தில் சிஐடியு இன்கோசர்வ், ஹவுசிகோஸ் ஒப்பந்தத் தொழிற்சங்க பொதுச் செயலர் சக்கரபாணி, அலுவலகச் செயலர்அமிர்தலிங்கம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
  அப்போது, என்எல்சி நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளி பணியாற்றும் இடத்தில், நிரந்தரத் தொழிலாளி செய்யும் அதே வேலையை ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்தால் அதன் விவரத்தை அளிக்க வேண்டும் எனவும், அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
  தொடர்ந்து, அனைத்து ஒப்பந்தத் தொழில்சங்க நிர்வாகிகள் மத்திய துணை முதன்மை தொழிலாளர் நல ஆணையரை சந்தித்து, சம வேலைக்கு சம ஊதியம், ஊதிய உயர்வு உள்பட 10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். வரும் 12-ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.
  இதில், தொமுச சார்பில் கனக.பழனிவேல், ஹென்றி, தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் திருநாவுக்கரசு, முருகவேல், அய்யப்பன், பாட்டாளி தொழில்சங்கம் குப்புசாமி, தொழிலாளர் விடுதலை முன்னணி செளந்தர், பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  இதுகுறித்து ஒப்பந்தத் தொழில்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
  மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப் படி, ஊதிய உயர்வு உள்பட 10 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்துள்ளோம்.
  இதுகுறித்து நிர்வாகத்துடன் பேசுவதாக மத்திய துணை முதன்மை தொழிலாளர் நல ஆணையர் கூறியுள்ளார். இந்த கோரிக்கைகளில் நான்கையாவது நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் திட்டமிட்டப்படி 12-ஆம் தேதி வேலைநிறுத்த ஆயத்தப் பேரணி நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai