சுடச்சுட

    

    ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

    By DIN  |   Published on : 09th December 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒக்கி புயலில் சிக்கி காணாமல்போன கடலூர் மாவட்ட மீனவர்களின் குடும்பத்தினரை மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, மீனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
    கடலூர் மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி, கேரளப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் சென்ற சுமார் 100 மீனவர்கள் கடந்த நவம்பர்
    30-ஆம் தேதி வீசிய ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டனர்.
    இவர்களில் பலர் லட்சத் தீவுகள், கேரளம், கர்நாடகம், குஜராத் மாநிலங்களில் பத்திரமாக கரை ஒதுங்கியதாகத் தகவல் வந்துள்ள நிலையில், 19 பேர் குறித்த விவரம் இதுவரை கிடைக்கவில்லை என மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
    இந்த நிலையில், கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரைச் சேர்ந்த, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், காணாமல்போன மீனவர்களை மீட்டுத் தருமாறு கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர்.
    இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்களை கண்டுபிடிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களில் 40 பேரைக் காணவில்லை.
    இவர்களில் 24 பேர் பல்வேறு பகுதிகளில் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 16 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தமிழக முதல்வரைச் சந்தித்ததோடு, கேரள மாநில ஆளுநரையும் தொடர்புகொண்டுள்ளேன். மீனவர்களைத் தேடும் பணியில் இந்திய கப்பல் படையின் கப்பல்கள், விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
    பல்வேறு பகுதிகளில் கரை ஒதுங்கியவர்கள் மீண்டும் வீடு திரும்பும் வகையில் டீசலுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
    பின்னர், சோனாங்குப்பம், ராசாப்பேட்டை ஆகிய மீனவ கிராமங்களுக்குச் சென்ற அமைச்சர், அங்கும் காணாமல்போன மீனவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    இந்த நிகழ்வுகளின்போது அதிமுக கடலூர் நகரச் செயலர்
    ஆர்.குமரன், ஜெயலலிதா பேரவைச் செயலர் வ.கந்தன், முன்னாள் கவுன்சிலர்கள் வி.பழனிச்சாமி, பஞ்சாயுதபாணி, கே.தமிழ்ச்செல்வன், அதிமுக நிர்வாகி வேலவன், மீனவர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் பெரு.ஏகாம்பரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai