Enable Javscript for better performance
கடலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் ஆக்கிரமிப்புக் கட்டடங்களை அகற்றும் பணியை வருவாய்த் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
    கடந்த 2015-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மனித உயிரிழப்புகளும், கால்நடைகள் சாவு, உடமை சேதமும் ஏற்பட்டது. நீர் நிலைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளே குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததற்குக் காரணம் என்று பல்வேறு அமைப்புகளும் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதில், முதல்கட்டமாக திருப்பாதிரிபுலியூர் வழியாகச் சென்று கெடிலம் ஆற்றில் கலக்கும் சின்ன வாய்க்காலின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, தற்போது அண்ணா பாலத்திலிருந்து கெடிலம் ஆறு கடலில் கலக்கும் பகுதி வரையிலான பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    மார்க்சிஸ்ட் கம்யூ. கட்டடம் அகற்றம்: சனிக்கிழமை இம்பீரியல் சாலைப் பகுதியில் ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர அலுவலகம், அலுவலக முகப்பில் இயங்கி வந்த தேநீர்க் கடை ஆகியவை முழுமையாக இடித்து அகற்றப்பட்டன. மேலும், அந்தப் பகுதியிலிருந்த உணவகம், கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
    இதுகுறித்து கடலூர் வட்டாட்சியர் (பொ) எஸ்.சிவா கூறியதாவது: கெடிலம் ஆற்றின் கரையில் 1,500 சதுர மீட்டர் இடம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும்.
    தற்போது இம்பீரியல் சாலையில் சுமார் 10 கடைகள் முழுமையாகவும், பகுதியாகவும் அகற்றப்பட்டுள்ளன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர அலுவலகம் செயல்பட்ட பகுதி பொதுப் பணித் துறையினரின் பாதை பயன்பாட்டுக்கான பகுதியாகும். கெடிலத்தில் அணை அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்துக்குச் செல்லவும், பொருள்கள் வைப்பதற்காகவும் இப்பகுதி தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
    அடுத்தகட்டமாக கடலூர் முதுநகர் குட்டைக்காரத்தெரு, திருப்பாதிரிபுலியூர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அளவீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
    கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம்: இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பொதுப் பணித் துறையிடமிருந்து இந்த இடம் பெறப்பட்டது. தற்போது அணை பயன்பாட்டுக்கு இடம் தேவையென்பதால் மாற்று இடம் தருவதாகக் கூறி, கட்சி அலுவலகம் இருந்த இடத்தை கையகப்படுத்தி உள்ளனர் என்று தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai