சுடச்சுட

    

    கெடிலம் ஆற்று சாலை பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
    கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கெடிலம் ஆற்றின் கரையோரமாக, படைவீரர் மாளிகையிலிருந்து கம்மியம்பேட்டை வரை தார்ச் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலையை சென்னை, விழுப்புரம் செல்வோர் புறவழிச் சாலையாகப் பயன்படுத்தி வந்தனர். இதனால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. எனினும், இந்தச் சாலையானது அடிக்கடி சேதமடைந்து வருவதும், அதனை சரிசெய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்துவதும் தொடர்ந்தது. இவ்வாறு போராட்டம் நடத்திய அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
    இந்தச் சாலையானது எந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டது. கெடிலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளதால் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமானது என்றும், நகராட்சி எல்லைக்குள் வருவதால் கடலூர் நகராட்சிக்கு சொந்தமானது என்றும், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலையாக வருவதால் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என்றும், மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என்றும் பல்வேறு கருத்துகள் நிலவி வந்தன.
    இதனால் இந்தச் சாலை அவசர கதியாக மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளுக்கிடையே அமைக்கப்பட்டபோதிலும், அதனை எந்த நிதியில் பராமரிப்பது என்ற பிரச்னை தொடர்கிறது. இதனால், பழுதடையும் சாலையை சீரமைக்கும் பணி உடனடியாக நடைபெறவில்லை.
    நீண்ட காலமாகத் தொடரும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே முயற்சி மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக, இந்தச் சாலை அமைந்திருக்கும் இடங்களின் சர்வே எண்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வருவாய்த் துறை, நகராட்சியின் நில அளவையர்கள், ஓய்வுபெற்ற நில அளவையர்கள் சுமார் 10 பேர் சாலையை அளந்து சர்வே எண்ணை கண்டுபிடிக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
    இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறியதாவது: தற்போது சாலையை அளவீடு செய்து, அதன் சர்வே எண்ணை கணக்கெடுத்து வருகிறோம்.
    இந்தப் பணி முழுமையடைந்த பின்னர் இந்தச் சாலை தேசிய அல்லது மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்படும்.
    அப்போதுதான் சாலை பழுதடைந்தாலோ அல்லது புதிய சாலையையோ அந்தந்தத் துறையின் ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ள முடியும். தொடர் பராமரிப்புக்கும் எளிதாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
    பொதுநல அமைப்பினரின் பல்வேறு கட்டப் போராட்டங்களின் பலனாக தற்போது இந்த முயற்சி நடைபெற்று வருவதாகவும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai