சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்கள் மூலமாக 4,436 வழக்குகளுக்கு தீர்வுகள் காணப்பட்டன.
  மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் ஆகிய நீதிமன்றங்களில் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் தொடங்கிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி தலைமை வகித்து, வழக்கு விசாரணை நடத்தினார். இதில், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சொத்துப் பிரச்னை தொடர்பான வழக்குகள், குடும்ப வழக்குகள், குற்ற வழக்குகள், நீதிமன்றம் செல்லாத வங்கி வழக்குகள் உள்ளிட்டவை விசாரிக்கப்பட்டன.
  மக்கள் நீதிமன்றத்தில் மகிளா நீதிமன்ற நீதிபதி எம்.செல்வம், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் பரமேஸ்வரி உள்பட அனைத்து நீதிபதிகளும், வழக்குரைஞர்களும் பங்கேற்றனர். மேலும், வங்கியாளர்கள், அரசுப் போக்குவரத்துக் கழகத்தினர், காப்பீட்டு நிறுவனத்தினர், வாதிகள் பங்கேற்றனர்.
  கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் ஆர்.ரெங்கநாதன் செய்திருந்தார்.
  மாவட்டம் முழுவதும் மொத்தம் 4,436 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டன.
  இதன் மூலமாக ரூ.16.61 கோடிக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  பண்ருட்டி: பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரு அமர்வுகளாக நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 118 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. முதல் அமர்வு, சார்பு நீதிபதி ஏ.பிரபாவதி, மாவட்ட உரிமையில் நீதிபதி எல்.கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், விபத்து, உரிமையியல், காசோலை, குடும்ப நலம் உள்பட மொத்தம் 24 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.37 லட்சம் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டது.
  பண்ருட்டி குற்றவியல் நடுவர் டி.கணேசன் முன்னிலையில் நடைபெற்ற இரண்டாவது அமர்வில், 94 வழக்குகளுக்கு ரூ.1.12 கோடி மதிப்பில் தீர்வு காணப்பட்டது. உறுப்பினர்கள் வி.ஜெகதீசன் ரத்தினகுமார், ஆர்.திவாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிக்குழு இளநிலை நிர்வாக உதவியாளர் கே.புவனேஸ்வரி செய்தார்.
  சிதம்பரம்: சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளவசரன் தலைமை வகித்தார். சார்பு நீதிபதி நீஷ் முன்னிலை வகித்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி லதா, குற்றவியல் நடுவர்-1 நீதிமன்ற நீதிபதி ஆயிஷ்பேகம், நடுவர்-2 நீதிமன்ற நீதிபதி பார்த்தீபன், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயபாலன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஞானசேகரன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்கள் நீதிமன்றத்தில் 102 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 2 கோடியே 29 லட்சத்து 38 ஆயிரத்து 893 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai