சுடச்சுட

  

  காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் போராட்டம்

  By கடலூர்/விழுப்புரம்,  |   Published on : 11th December 2017 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒக்கி புயல் பாதிப்பால் காணாமல்போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி, கடலூரில் 3 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  கடலூர் மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி, கேரளம் ஆகிய பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்களில், ஒக்கி புயல் தாக்குதலால் 16 மீனவர்கள் காணாமல் போயினர். இவர்களை மீட்கக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
  போராட்டத்துக்கு அமைப்பின் நிறுவனர் தலைவர் பெரு.ஏகாம்பரம் தலைமை வகித்தார். இதில் கடலூர் தேவனாம்பட்டினம், ராசாப்பேட்டை, சோனாங்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த மீனவப் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிர்வாகிகள் தங்கேஸ்வரன், முரளிதரன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  நூதனப் போராட்டம்: கடலூர் தேவனாம்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களில் இதுவரை 10 பேர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. எனவே, அவர்களை மீட்கக் கோரி, தேவனாம்பட்டினம் மீனவர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர். அப்போது, பெண்கள் தங்களது குடும்பத்தினரை மீட்டுத் தர வலியுறுத்தி, ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  ரயில் மறியல் முயற்சி: இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழர் இயக்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட முயன்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நவீன் உள்ளிட்ட சிலரை போலீஸார் கைது செய்தனர்.
  கோட்டக்குப்பத்தில் மீனவர்கள் மறியல்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் 6 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  ஒக்கி புயலில் சிக்கி மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தியும், விழுப்புரம் மாவட்டம், நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் சீனுவாசன் (47), முருகன் (30) ஆகியோர் குமரிக் கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமாகினர், அவர்களை மீட்க வலியுறுத்தியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
  தந்திராயன்குப்பம், சோதனைக்குப்பம், சின்னமுதலியார் சாவடி, பொம்மையார்பாளையம், நடுக்குப்பம் உள்பட 6 கிராம மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை காலை திரண்டனர். பின்னர், அவர்கள் கையில் கருப்புக் கொடி ஏந்தியும், கருப்புப் பட்டை அணிந்தும் ஊர்வலமாக சென்றனர்.
  கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதிக்குச் சென்ற அவர்கள், அங்கு கிழக்குக் கடற்கரைச் சாலையில் காலை 9.30 மணியளவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
  தகவலறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி. இளங்கோவன், காவல் ஆய்வாளர் மைக்கல் இருதயராஜ், உதவி ஆய்வாளர் வெங்கடேன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
  மீனவர்களின் கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று போலீஸார் உறுதியளித்தனர். அதன்பேரில், மறியல் கைவிடப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai