சுடச்சுட

    

    கடலூர் நகராட்சியில் ரூ.5 கோடியில் சாலைப் பணிகள்

    By  கடலூர்,  |   Published on : 12th December 2017 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் நகராட்சியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் நடைபெற உள்ளன.
     அண்மையில் பெய்த பலத்த மழையால் கடலூர் நகராட்சியில் சாலைகள் சேதமடைந்தன. மேலும், பல்வேறு நகர்களின் இணைப்புச் சாலைகளுக்கான திட்டப் பணிகளும் தொடங்கப்படவில்லை. இந்தப் பணிகளை தொடங்க ஏதுவாக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பணிக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
     அதன்படி கடலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 10 கிலோ மீட்டர் சாலைகள் ரூ.5 கோடியில் அமைக்கப்படுகிறது. இதில், 50 சதவீதம் நிதியை மாநில அரசும், எஞ்சிய நிதியை நகராட்சி நிர்வாகமும் செலுத்துகிறது.
     அதன்படி, பல்வேறு அமைப்புகளின் நீண்டநாள் கோரிக்கையான வண்டிப்பாளையம் சரவணாநகர் - நத்தவெளி இணைப்புச் சாலையானது 790 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் அமைகிறது. இதற்கு ரூ.81.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
     வார்டு எண் 12-இல் பகவந்தர்தெருவில் ரூ.65 லட்சம், வார்டு எண் 42-இல் பள்ளிவாசல் தெரு சாலைக்கு ரூ.52 லட்சம், வார்டு எண் 14-இல் சுப்ரமணியகுருக்கள் நகரில் ரூ.52 லட்சம், 33-ஆவது வார்டு சலங்கை நகரில் ரூ.47.20 லட்சத்திலும் சாலைகள் அமைக்கப்படுகின்றன.
     இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை திறக்கப்பட்டு, ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. ஒப்பந்தப் புள்ளி பெற்றவர்கள் விரைவில் பணிகளை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
     ஒப்பந்தப் புள்ளிக்கான பெட்டி இல்லை: முன்னதாக, பிற்பகல் 3.30 மணிக்கு ஒப்பந்தப் புள்ளிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,
     ஒப்பந்ததாரர்கள் தங்களது ஒப்பந்தப் புள்ளிகளை குறிப்பிட்டு அதனை செலுத்துவதற்கான பெட்டியானது நகராட்சி அலுவலகத்தில் இல்லை. இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் கேட்டபோது, அந்தப் பெட்டி நகராட்சி பொறியாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு பெட்டி இல்லாததோடு அறையும் பூட்டப்பட்டிருந்தது. இதனால், ஒப்பந்ததாரர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
     இதுகுறித்து நகராட்சி ஆணையர் நெ.முஜிபுர் ரகுமானிடம் கேட்டபோது, நகராட்சி பொறியாளர் அலுவலக வேலையாக சென்னை சென்றுள்ளார். எனினும், நகராட்சி வளாகத்தில் அப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் ஆன்-லைன் மூலமாகவும் ஒப்பந்தப் புள்ளி கோரலாம் என்றார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai