சுடச்சுட

    

    கெடிலம், தென் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டக் கோரி பாமக மனு

    By  கடலூர்,  |   Published on : 12th December 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கெடிலம், தென்பெண்ணையாறுகளில் தடுப்பணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
     கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:
     கடலூரில் தென்பெண்ணை, கெடிலம் ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. பருவமழைக் காலங்களில் பெய்யும் அதிகப்படியான மழையானது இந்த ஆறுகள் வழியாகச் சென்று கடலில் சென்று கலக்கிறது. கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை முறையாக தடுப்பணை கட்டி சேமித்தால் கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், கோடைக்காலத்தில் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டையும் சமாளிக்கலாம். அதேநேரத்தில் கடலில் இருந்து நிலம் சார்ந்த பகுதிக்கு முன்னேறும் உப்புநீரையும் தடுக்கலாம்.
     எனவே, மழைநீரை சேமிப்பதற்கு கெடிலம் ஆற்றில் திருமானிக்குழியிலும், பெண்ணையாற்றில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்திருக்கும் சிறு தடுப்பணையை மாற்றி அமைப்பதற்கு பொதுப்பணித்துறை மூலம் மதிப்பீடு செய்து அனுமதி வழங்க வேண்டும்.
     இந்தத் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்காதபட்சத்தில் மாவட்ட மக்களின் நன்மை கருதி மாவட்ட ஆட்சியரே தடுப்பணை கட்ட உரிய முறையில் ஆய்வு செய்து பொதுப் பணித் துறையினரை வழிகாட்டுதலுக்காக நியமித்து தடுப்பணை கட்ட அனுமதி வழங்கலாம். அவ்வாறு அனுமதி வழங்கும்பட்சத்தில் இரு தடுப்பணைகளையும் பாமக சார்பில் சிறப்பாக கட்டித்தருவோம் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
     மாவட்டச் செயலர்கள் சண்.முத்துகிருஷ்ணன், இரா.ஆறுமுகம், சமூக நீதிப் பேரவை மாநிலச் செயலர் கு.தமிழரசன், மாநில இளைஞரணி துணைச் செயலர் கோ.சந்திரசேகரன், மாவட்ட அமைப்புச் செயலர் பி.வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் வாட்டர்மணி, நிர்வாகிகள் போஸ் ராமச்சந்திரன், ரமேஷ், பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai