சுடச்சுட

    

    திறக்கப்பட்டு 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத பள்ளிக் கட்டடம்

    By நமது நிருபர், நெய்வேலி  |   Published on : 12th December 2017 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்குணம் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறக்கப்பட்டு 6 மாதங்களாகியும் இதுவரை பயன்பாட்டுக்கு வராததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
     குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்டது கல்குணம் ஊராட்சி. அடிக்கடி வெள்ள பாதிப்புக்குள்ளாகும் கிராமம். இங்கிருந்த அரசு நடுநிலைப் பள்ளி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பள்ளியில் கல்குணம், திருவெண்ணைநல்லூர், பூதம்பாடி, ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 110 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளது.
     இந்தப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியும் இயங்கி வருகிறது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். உயர்நிலைப் பள்ளியும், தொடக்கப் பள்ளியும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருவதால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறதாம்.
     இதனைக் கருத்தில்கொண்டு, பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி செலவில் 2011-12-ஆம் ஆண்டில் வகுப்பறைகள், நூலகம், ஆய்வுக் கூடம், கணினி அறை, தலைமையாசிரியர் அறை, கழிப்பறை ஆகியவை உள்ளடங்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது. மேலும், மாணவர்களுக்கான சமையல் அறைக் கட்டடமும் கட்டப்பட்டது.
     இந்தக் கட்டடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் கடந்த ஜூன் மாதம் திறந்து வைத்தார். ஆனால், திறப்பு விழா முடிந்து 6 மாதங்களாகியும், இதுவரை புதிய பள்ளிக் கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு பழைய கட்டடத்திலேயே பாடம் நடத்தப்படுகிறது. மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள இருள் சூழ்ந்த பழைய சமையல் கூடத்திலேயே மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட சமையலறை முறையாகப் கட்டப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் சுற்றுச் சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாகத் திகழ்கிறது. பள்ளியின் எதிரே பெருமாள் கோயில் குளம் உள்ளது. ஆழமான இந்தக் குளத்தின் வழியாகவே மாணவர்கள் வந்துச் செல்ல வேண்டியுள்ளதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
     எனவே, மாணவர்களின் நலன் கருதி புதிய பள்ளிக் கட்டடத்தையும், சமையல் கூடத்தையும் விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளி எதிரே உள்ள குளத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். மேலும், தலைமையாசிரியரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
     இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், இந்தப் பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடம் கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளது. புதிய கட்டடத்தில் வேலை குறைபாடுகள் உள்ளன. இதனை நிவர்த்தி செய்து, புதிய பள்ளிக் கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai