சுடச்சுட

  

  பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

  By  சிதம்பரம்,  |   Published on : 13th December 2017 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அருகே குமராட்சியில் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி, விவசாயிகள், வியாபாரிகள் சார்பில் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு, முற்றுகைப் போராட்டம், சாலை மறியல் நடைபெற்றது.
   கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டத்துக்கு உள்பட்ட குமராட்சி ஒன்றியத்தில் சுமார் 11 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் விவசாயம் நடைபெறுகிறது.
   ஆண்டுதோறும் இந்தப் பகுதி வெள்ளம், புயல், வறட்சி ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில்கொண்டு விவசாயிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசின் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து 5, 383 பேர் காப்பீட்டுத் தொகை செலுத்தினர்.
   இதில் 2, 966 பேருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
   இதையடுத்து, விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர், தனியார் வங்கி காப்பீட்டுத் திட்ட மேலாளர், குமராட்சி வேளாண் உதவி இயக்குநர் ஆகியோரிடம் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியும், போராட்டங்களில் ஈடுபட்டும் வந்தனர்.
   காப்பீட்டுத் தொகை விரைவில் விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இதுவரை காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை.
   இதைத்தொடர்ந்து, விவசாயிகள் அறிவித்தபடி, கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி. விநாயகமூர்த்தி தலைமையில், வர்த்தக சங்கத் தலைவர் கே.ஆர்.ஜி. தமிழ்வாணன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குமராட்சியில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
   விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக குமராட்சி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் வர்த்தகர்கள் கடையடைப்பு நடத்தினர்.
   போராட்டக்காரர்களிடம் வேளாண்மை உதவி இயக்குநர் வேல்விழி, டி.எஸ்.பி. சிட்டிபாபு, காவல் ஆய்வாளர்கள் ஷியாம்சுந்தர், செபஸ்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
   விவசாயிகள் தரப்பில் தனியார் காப்பீட்டு நிறுவன மேலாளர் வந்து உறுதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
   சாலை மறியல்: அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி. சிட்டிபாபு விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்கத் தலைவர் கே.ஆர்.ஜி தமிழ்வாணன் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசியதாகத் தெரிகிறது.
   இதையடுத்து, போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
   இதனால், விவசாயிகள் சமரச பேச்சுவார்த்தையை ஏற்காது திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் க.ஜெயந்தி ஆகியோர் விவசாய சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி, தமிழ்வாணன் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
   வருகிற 25-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இல்லையெனில் 26-ஆம் தேதி கடலூரில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் பி. விநாயகமூர்த்தி கூறியதாவது:
   இந்தப் பகுதி விவசாயிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தண்ணீர் வராததால் நேரடி நெல் விதைப்பு, நடவு செய்த பயிர்கள் கருகின. இதனால், விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டது என்றார். வேளாண்துறை சார்பில் கூறப்பட்டதாவது: கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 383 பேர் காப்பீடு செய்தனர். இதில் 2 ஆயிரத்து 966 பேர் வங்கிக் கணக்கில் இழப்பீட்டுதொகை வரவுவைக்கப்பட்டுள்ளது.
   89 கிராமங்களில் வெட்சியூர், இளங்கம்பூர், இளநாங்கூர், கருப்பூர் ஆகிய நான்கு கிராமங்களில் அதிக சதவிகிதத்தில் அறுவடை செய்துள்ளதால் இந்தக் கிராமங்களைச் சேர்ந்த 181 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க இயலாது.
   காப்பீட்டு நிறுவனம் அறிவித்தபடி 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 30-ஆம் தேதி வரை காப்பீட்டுத் தொகை செலுத்திய 960 பேருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.
   அதே ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதிவரை காப்பீட்டுத் தொகை செலுத்திய 1,276 பேருக்கும் இழப்பீட்டுத் தொகை வரவில்லை. தற்போது சுமார் ரூ. 7.50 கோடி இழப்பீட்டுத் தொகையை குமராட்சி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கு பட்டியல் தயார் நிலையில் உள்ளது. இன்னும் சில தினங்களில் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai