Enable Javscript for better performance
என்எல்சியில் பணி செய்த போது விபத்து: ஒப்பந்தப் பெண் தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    என்எல்சியில் பணி செய்த போது விபத்து: ஒப்பந்தப் பெண் தொழிலாளி சாவு 

    By DIN  |   Published on : 14th December 2017 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் போது,  அங்கு பணி செய்த தினக் கூலி ஒப்பந்தப் பெண் தொழிலாளி தீக்காயமடைந்ததில் உயிரிழந்தார். மேலும், மூன்று பெண் தொழிலாளிகள் காயமடைந்தனர்.
    என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 2-ஆவது அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்திக்காக எரிக்கப்படும் புழுப்பு நிலக்கரியின் உலர் சாம்பல் லாரிகள் மூலம் வெளியேற்றப்படுகிறது.
    இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உலர் சாம்பால், குழாய் மூலம் லாரியில் ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் பணியில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான தினக்கூலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 
    அப்போது, அழுத்தம் காரணமாக வேகமாக வெளியேறிய உலர் சாம்பல் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொப்புளிக்குப்பம் வேலுவின் மனைவி அருந்தவம் (38),  முதனை அமிர்தலட்சுமி (40), மந்தாரக்குப்பம் மணிமேகலை (32),  ராணி (32) ஆகியோர் மீது கொட்டியது.
    இதில், பலத்த தீக்காயமடைந்தவர்களை மீட்டு, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருந்தவம், அமிர்தலட்சுமியை தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அருந்தவம் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முற்றுகைப் போராட்டம்: இந்த நிலையில், புதன்கிழமை  உயிரிழந்த அருந்தவத்தின் உறவினர்கள் சுமார் 400 பேர்,  மாநில பாமக துணைப் பொதுச் செயலர் அசோக்குமார், மேற்கு மாவட்டச் செயலர் சுரேஷ் ஆகியோர் தலைமையில், உயிரிழந்த அருந்தவத்தின் வாரிசுக்கு நிரந்தர வேலை,  நஷ்ட ஈடு வழங்கக் கோரி, அனல் மின் நிலையம் 2-ஆவது விரிவாக்கம் எதிரே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தொடர்ந்து, பாமக நிர்வாகிகளும், சிஐடியூசி தொமுச நிர்வாகிகளும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறைப் பொது மேலாளர் ஞானசேகரன், விருத்தாசலம் வட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
    இதில், உயிரிழந்த அருந்தவத்தின் வாரிசுக்கு வேலை வழங்கப்படும் என்பதற்கான உறுதிக் கடிதம் வழங்கப்பட்டது. 
    மேலும், விபத்து நஷ்ட ஈடாக ரூ. 2.50 லட்சம் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகள் செய்ய ஒப்பந்ததாரர் தரப்பில் ரூ. 50 ஆயிரம் வழங்கவும் ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai