சுடச்சுட

    

    தேநீர்க் கடையில் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த இளைஞருக்கு எஸ்.பி. பாராட்டு

    By DIN  |   Published on : 14th December 2017 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தவற விட்ட ரூ. 40 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த தேநீர்க் கடைக்காரரை கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் புதன்கிழமை பாராட்டினார்.
    கடலூர் சுப்பராயலு நகரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் செந்தமிழ்ச்செல்வன் (26). இதே பகுதியில் தேநீர்க் கடை நடத்தி வருகிறார். இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலராகவும் செயல்பட்டு வருகிறார்.
    இந்த நிலையில், கடந்த மாதம் 10 -ஆம் தேதி கடையின் ஒரு பகுதியில் சுருட்டப்பட்ட நிலையில் ரூ. 40 ஆயிரம் கிடந்தது. இதைப் பார்த்த செந்தமிழ்ச்செல்வன் அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது யாரும் உரிமை கோரவில்லை.
    இதையடுத்து, திருப்பாதிரிபுலியூர் காவல் நிலையம் சென்று ஆய்வாளர் எஸ்.உதயகுமாரிடம் விபரங்களைக் கூறி,  அந்தப் பணத்தை ஒப்படைத்தார்.
    இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் அந்தப் பணம், கடலூர் சரவணா நகரைச் சேர்ந்த ப.ராஜேந்திரன் (58) என்பவருக்குச் சொந்தானது என்றும், இவர் வேளாண் துறையில் உதவிச் செயற்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், ஏ.டி.எம். மையத்தில் எடுக்கப்பட்ட பணம் ரூ. 40 ஆயிரத்தை தேநீர்க் கடையில் தவறவிட்டதும் தெரிய வந்தது.
    இதையடுத்து, புதன்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராஜேந்திரனிடம் அவரது பணத்தைக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் ஒப்படைத்தார். பின்னர், செந்தமிழ்ச்செல்வனின் நேர்மையைப் பாராட்டி அவருக்கு ரொக்கப் பரிசை வழங்கிப் பாராட்டினார்.
    கடலூர் கோட்டத் துணைக் கண்காணிப்பாளர் க.நரசிம்மன், ஆய்வாளர் எஸ்.உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai