Enable Javscript for better performance
இணையதளம் மூலம் சான்றுகள் வழங்கும் பணி நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் இணையம் மூலம் சான்றுகள் வழங்கும் பணி வியாழக்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
    தமிழக அரசின் உத்தரவின் பேரில் சாதி, இருப்பிடம், வருவாய் உள்ளிட்ட முக்கிய  சான்றுகள், பட்டா மாற்றம் பரிந்துரை சான்றுகள் அனைத்தும் இணையம் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. 
    இணைய சான்றுகள் பரிந்துரை செய்வதற்கான செலவினத் தொகையை கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் வழங்கவில்லை. இந்தத் தொகையை வழங்கக் கோரி, கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை வரை இறுதிக் கட்ட கோரிக்கையும் விடுத்திருந்தனர். இத்துடன்  வெளி மாவட்டங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் வகையில், அவர்களுக்குப் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்புகளை மேற்கொண்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குப் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர்.
    இது தொடர்பாக கடலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் ரவி தலைமையில், மாவட்ட இணைச் செயலர்,  வட்டச் செயலர்  உள்ளிட்ட நிர்வாகிகள்  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்து,  மனுவையும்  அளித்தனர். இதுதொடர்பாக  மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்வதாக தெரிவித்ததாக கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
    ஆனால், இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ளாத நிலையில், முன்னரே அறிவித்தபடி, வியாழக்கிழமை முதல் இணையம் மூலம் சான்றுகள் வழங்கும் பணியை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நிறுத்தியுள்ளனர்.  இணையம் மூலம் சான்றுகள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai