சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெள்ளிக்கிழமை கடலூரில் அதிகாரிகளுடன் ஆலோசனையும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலும் நடத்தவுள்ளார். 
    தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித், கோவை மாவட்டம் சென்று அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடந்து அங்கு அவர் தூய்மை இந்தியா திட்டப் பணியிலும் ஈடுபட்டார். தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் சென்று அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
    இந்த நிலையில், கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வியாழக்கிழமை பங்கேற்ற ஆளுநர், பின்னர் கடலூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார்.
    தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டப் பணிகளைப் பார்வையிடுகிறார். அதன் பின்னர், சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.
    ஆளுநர் வருகையையொட்டி, கடலூர் - சிதம்பரம் சாலை, நெல்லிக்குப்பம் சாலை உள்ளிட்ட சாலைகளைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
    கடலூர் பேருந்து நிலையத்தை ஆளுநர் ஆய்வு செய்யலாம் என கூறப்படுகிறது. இதனால், நள்ளிரவு பேருந்து நிலையத்தில் உள்ள குப்பைகளை அகற்றி, கழிப்பறைகளைத் தூய்மைப்படுத்தி,  மின் விளக்குகளைஅமைத்தனர். ஆளுநர் வருகையையொட்டி, கடலூரை பாதுகாப்பு வளையத்துக்குள் போலீஸார் கொண்டு வந்துள்ளனர்.
    புராதன கோயில்கள் குறித்து தகவல்களைச் சேகரித்த அதிகாரிகள்: கடலூருக்கு வருகை தரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,  மாவட்டத்தில் உள்ள புராதன கோயில்கள் குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார் எனத் தெரிகிறது. இதையொட்டி,  இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடலூர் பாடலீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி, சிதம்பரம் நடராஜர், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர், திருவதிகை வீரட்டானேஸ்வரர், ஸ்ரீ முஷ்ணம் பூவராகசாமி ஆகிய கோயில்கள் பற்றிய  தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
    ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடலூர் வருகையையொட்டி கடலூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட  ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்தில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் சி.விஜயகுமார் தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.  வேதரத்தினம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai