சுடச்சுட

  

  ஆளுநரின் ஆய்வு அரசியல் அமைப்பு  சட்டத்துக்குப் புறம்பானது: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 16th December 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் தமிழக ஆளுநர் நடத்திய ஆய்வு அரசியல் அமைப்புச் சட்டத்துக்குப் புறம்பான, வரம்பு மீறிய செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
   இதுகுறித்து கடலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறதா, இல்லை என்று நினைத்து ஆளுநர் ஆய்வு மேற்கொள்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. ஆளுநரின் ஆய்வு மாவட்டந்தோரும் தொடர்ந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
   என்எல்சி நிறுவனத்தில் அனைத்துப் பணிகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை நிர்வாகம் செய்கிறது. தனியார் நிறுவனத்தினர் வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த கூலிக்கு ஆள்களை அழைத்து வந்து வேலை வாங்குகிறார்கள். இப்படி செய்தால், கடலூர் மாவட்ட, தமிழக இளைஞர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும் எனப் புரியவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் பொதுத் துறை நிறுவனம் இயங்கி வருகிறது.
   ஒக்கி புயலுக்கு சில மணி நேரத்துக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தால் ஒரளவுக்கு உயிர்ச் சேதத்தைத் தவிர்த்திருக்க முடியும். கடந்த திமுக ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு 3,400 வாக்கி-டாக்கி சாதனங்கள் வாங்கப்பட்டன. ஆனால், கோபுரம் (டவர்) பழுதாகி செயல்படவில்லை.  தற்பொழுது 20,000 ஆயிரம் வாக்கி-டாக்கிகள் ஓராண்டுக்கு முன்பே வாங்கி வைத்துள்ளனர். ஆனால், இது செயல்பட வேண்டுமானால் 17 டவர்கள் அமைக்க வேண்டும். இதற்கு டெண்டர் விடும் பணியை தற்போதுதான் தொடக்கியுள்ளனர். இதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. தொழில்சாலை கழிவுகள் வங்கக் கடலில் கலப்பதால் மீன் வளம் குறைந்துள்ளது. இதனால்தான் மீனவர்கள் அரபிக் கடலை நாடிச் செல்கின்றனர்.
   கடலூர் மாவட்டத்தில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது.  விருத்தாசலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதற்காக கண்ணகி, முருகேசனை  எரித்து கொலை செய்த வழக்கை சிபிஐ நடத்தி வருகிறது. இந்த வழக்கில் காவல் அதிகாரிகள் இருவர் 
  சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாட்சிகளை மிரட்டி வருகின்றனர். நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டிய செல்வராசு முதல் நாளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த  நிலையில் மீண்டும் சாட்சிகளை மறு விசாரனை செய்ய வேண்டும். 
   அதேபோல நெய்வேலி காவல் நிலையத்தில் சுப்பரமணி உயிரிழந்த வழக்கில் அவரது மனைவிக்கு  தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
   மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், ஜி.மாதவன், பி.கருப்பையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai