சுடச்சுட

    

    கடலூரில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
    ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஓராண்டாக நிறைவேற்றாத நிர்வாகத்தைக் கண்டிப்பது, ஓய்வூதியர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய ரூ.5 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தொமுச தலைமையில் தொழிற் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    அதன்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர்  வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். இந்த நிலையில்,  கடலூர் மண்டல அலுவலகம் முன் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், வடலூர், நெய்வேலி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் ஆகிய பணிமனைகளைச் சேர்ந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மாலையில் கடலூர் மண்டல அலுவலகம் வழியாக வந்த அரசுப் பேருந்துகளை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் சிலர் மறித்தனர். மேலும், பேருந்துகளை இயக்கக் கூடாது என ஓட்டுநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த தொழிற்சங்க நிர்வாகிகள் பேருந்துகளை தடுக்கக் கூடாது என தொழிலாளர்களை சமரசம் செய்தனர்.
    அப்போது, அங்கு வந்த திருப்பாதிரிபுலியூர் காவல் ஆய்வாளர் உதயகுமாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளாக மாறியது. இதனால், ஆத்திரமடைந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணிமனை அருகே சிதம்பரம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைதுசெய்ய நேரிடும்  என காவல்  ஆய்வாளர்  எச்சரித்ததை அடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai