சுடச்சுட

    

    தனியார் நிறுவன விவகாரம்: இந்திய கம்யூ. கட்சியினர் இரு கோஷ்டிகளாக ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 17th December 2017 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூரில் தனியார் நிறுவன விவகாரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இரு கோஷ்டிகளாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பரங்கிப்பேட்டை அருகே உள்ள கே.பஞ்சங்குப்பத்தில் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமைக்கப்படும்போது விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நிலம் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன், நிலம் கொடுத்தோர் நலச் சங்கம் அமைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. இதன்பலனாக மின் உற்பத்தி நிறுவனம் அந்த சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கியதாகக் கூறப்படுகிறது.
    இந்தப் பணத்தை மிகவும் குறைந்த விலைக்கு நிலம் விற்பனை செய்த சுமார் 50 விவசாயிகள் பகிர்ந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    ஆனால், மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்த தங்களுக்கு உரிய பணம் கிடைக்கவில்லை எனவும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புவனகிரி வட்டம், கரிக்குப்பத்தைச் சேர்ந்த சி.ராமலிங்கம் கடந்த 4-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், 5-ஆம் தேதியன்று சங்கத்தின் தலைவர் ச.சண்முகம், துணைச் செயலரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலருமான எம்.சேகர், க.பரமானந்தன் ஆகியோர் மீது பரங்கிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், உள்நோக்கத்துடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எம்.சேகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்
    6-ஆம் தேதி மனு அளித்தார்.
    இந்த நிலையில், ஆலைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அந்த நிறுவனம் வழங்கிய உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    பணத்தை மீட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலர் வி.எம்.சேகர் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் வே.துரைமாணிக்கம், கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி.மணிவாசகம், துணைச் செயலர் வி.குளோப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    அதேநேரத்தில், மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
    மாவட்டச் செயலர் எம்.சேகர் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தால் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு எதிராகப் போராடுவோர் மீது காவல் துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி போராட்டம் நடத்தினர்.
    கடலூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் யார் என்பதை தீர்மானிக்க நீதிமன்றம் வரை சென்ற நிலையில், தற்போது எம்.சேகர், டி.மணிவாசகம் தலைமையில் தனித் தனி அணியினர் செயல்பட்டு வருகின்றனர்.
    இவர்கள் தனியார் நிறுவன பிரச்னையில் வெவ்வேறு நிலைப்பாட்டினை எடுத்து, ஒருவரையொருவர் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai