சுடச்சுட

  

  மணிலா பயிர்களில் வேர் அழுகல் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை

  By DIN  |   Published on : 17th December 2017 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள மணிலா பயிர்களில் வேர் அழுகல், கழுத்தழுகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
  குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி, அயன்குறிஞ்சிப்பாடி, ரெட்டிக்குப்பம், கண்ணாடி, வெங்கடாம்பேட்டை, ஆடூர் அகரம், கண்ணாடி, ராசாகுப்பம், கீழூர், பூதம்பாடி, கல்குணம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கார்த்திகை பட்ட மணிலா சாகுபடி செய்துள்ளனர். அண்மையில் போதிய இடைவெளியில் பெய்த மழையால் மணிலா செடிகள் செழித்து வளர்ந்தன.
  ஆனால், தற்போது நோய்த் தாக்குதல் காரணமாக செடிகள் அடிபாகத்துடன் துண்டாகி சேதம் அடைவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
  இதுகுறித்து உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது:
  விதை மணிலா 40 கிலோ கொண்ட மூட்டை ரூ.3,700-க்கு விற்கப்படுகிறது. ஏக்கருக்கு மூன்று மூட்டைகள் தேவை. ஒரு சதுர மீட்டரில் 33 மணிலா செடிகள் இருந்தால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.
  ஆனால், தற்போது கழுத்து, வேர் அழுகல் நோய்த் தாக்குதல் காரணமாக மணிலா செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு சதுர மீட்டருக்கு 20 முதல் 22 செடிகளே உள்ளதால் 3-இல் ஒரு பங்கு மகசூல் இழப்பு ஏற்படும். ஒரு ஏக்கருக்கு விதைப்பு முதல் இதுவரை சுமார் ரூ.22 ஆயிரம் செலவு செய்துள்ளோம். ஆனால், வேளாண் துறை அதிகாரிகள் மணிலா செடிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்குவதில்லை.
  எனவே, விவசாயிகள் பாதிக்கப்பட்ட செடிகளை மருந்துக் கடைகளில் காண்பித்து, மருந்து வாங்கி அதனை தெளித்து வருகின்றனர். அரசு சார்பில் ஜிப்சம் வழங்காததால் வெளிச் சந்தையில் வாங்கி பயன்படுத்தி வருகிறோம் என்றார் அவர்.
  இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநர் ப.சின்னக்கண்ணு கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 2,200 ஹெக்டேர் பரப்பளவில் மணிலா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விதைத்து சுமார் 30-நாள் வயதுள்ள பயிர்களில் கழுத்தழுகல், வேர் அழுகல் நோய் போன்ற பூஞ்சான நோய்கள் பரவலாகக் காணப்படுகிறது. தற்போது, செடிகளில் நோய் தென்படும் பகுதிகளிலும், பெய்த மழையால் நீர் தேங்கி வடிந்துள்ள பகுதிகளிலும் பெவிஸ்டின் அல்லது ஸாப் மருந்து ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து, பயிரும் நிலமும் சந்திக்கும் பகுதியில் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். இலைகளில் மட்டும் தெளித்தால் பலன் அளிக்காது.
  நோய் தாக்குதல் உள்ள பகுதிகளில் நோய் வித்துகள் இருப்பதால், அடுத்து வரும் காரிப் பருவ மணிலா பயிர்களில் கழுத்து அழுகல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மணிலா விவசாயிகள் அனைவரும் வரும் முன் காக்கும் நடவடிக்கையாக உழவின்போது மண்ணில் ஹெக்டேருக்கு டிரைகோடெர்மா விரிடி 2.5 கிலோ மற்றும் மக்கிய தொழு உரம் 50 கிலோ என்ற அளவில் கலந்து இட்டு நோய் வராமல் பயிரைப் பாதுகாத்து நல்ல மகசூலைப் பெறலாம் என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai