சுடச்சுட

    

    மத்திய அரசின் உயர் பதவிகளில் இடஒதுக்கீடு அமலாகவில்லை: ஜி.ராமகிருஷ்ணன்

    By DIN  |   Published on : 17th December 2017 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் உயர் பதவிகளில் இடஒதுக்கீடு அமலாகவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
    அந்தக் கட்சியின் கடலூர் மாவட்ட மாநாடு விருத்தாசலத்தில் சனிக்கிழமை தொடங்கியது. மாநாட்டைத் தொடக்கி வைத்த ஜி.ராமகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தூத்துக்குடியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    அகில இந்திய மாநாடு ஹைதராபாத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
    மண்டல் குழு பரிந்துரைப்படி இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசின் உயர் பதவிகளில் அமலாகவில்லை. மத்திய அரசின் தலைமைச் செயலகத்திலேயே துறைச் செயலர் பதவியில்கூட இது அமலாகவில்லை. எனவே, அனைத்து நிலைகளிலும் இடஒதுக்கீடு அமலாக வேண்டும். கிரீமிலேயரை காரணம் காட்டி பணியிடங்களை பொதுப் பிரிவுக்கு தள்ளிவிடக் கூடாது.
    பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய பாஜக அரசு மதப் பிரச்னைகளை கிளப்பி விட்டு அவர்களைத் திசை திருப்புகிறது. மத்திய அரசின் அடிமை போல தமிழக அரசு செயல்படுகிறது. ஒக்கி புயலால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்கும் வரை தேடும் பணியைத் தொடர வேண்டும்.
    காணாமல்போன மீனவர்களின் குடும்பத்துக்கு கேரள அரசு வழங்குவதுபோல ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காணாமல்போனால் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நிவாரணம் வழங்குவது என்ற சட்டத்தை திருத்தி, ஒரு மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் நியமனத்தில் ரூ.50 கோடி வரை கையூட்டு பெறப்பட்டு முறைகேடு நடந்துள்ளது.
    இந்த விவகாரத்தில், பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். மாநில ஆளுநர் அனைத்துத் துறை அதிகாரிகளையும் அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தி வருவதை ஏற்க முடியாது என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai