சுடச்சுட

    

    என்.எல்.சி.யில் மீண்டும் வேலை வழங்கக் கோரி நூதன முறையில் தொழிலாளர்கள் மனு

    By  கடலூர்,  |   Published on : 19th December 2017 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றிய இளைஞர்கள், மீண்டும் தங்களுக்கு வேலை வழங்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முட்டிபோட்டு நடந்து சென்று திங்கள்கிழமை மனு அளித்தனர்.
     விருத்தாசலம் வட்டத்துக்கு உள்பட்ட கெங்கைகொண்டான், பெரியாகுறிச்சி, கீழக்குப்பம், புதுநகர், குறிஞ்சிப்பாடி வட்டம் மூலக்குப்பம், முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 18 இளைஞர்கள் 2009-ஆம் ஆண்டு முதல் என்எல்சி நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தனராம்.
     இவர்கள் என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் வழங்கியவர்களாவர். இந்த நிலையில், 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இவர்களுக்கு நிர்வாகம் வேலை வழங்கவில்லையாம்.
     இதனால், வறுமையில் வாடிவரும் தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி, மனுக்கள் அளித்துள்ளனர். ஆனால், பணி வழங்கப்படவில்லையாம். மேலும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் 11 முறை மனு அளித்துள்ளனராம். கடந்த முறை மனு அளித்தபோது ஆட்சியர் வேலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதன்பேரில், தொழிலாளர்களுக்கு மாதத்துக்கு 10 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
     இதனால் ஏமாற்றமடைந்த தொழிலாளர்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்தனர். அவர்கள், பணியின்போது அணியப்படும் தலைக் கவசம் அணிந்து, அரை நிர்வாணக் கோலத்தில், முட்டி போட்டவாறு சென்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
     தொழிலாளர்களின் இந்த நடவடிக்கைக்கு ஆட்சியர் அதிருப்தி தெரிவித்து, அவர்களைச் சந்திக்க மறுத்தார். இதையடுத்து தொழிலாளர்கள் சட்டை அணிந்து வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai