Enable Javscript for better performance
பண்ருட்டி பேருந்து நிலையத்தில் செயல்படாத புறக் காவல் நிலையம் !- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி பேருந்து நிலையத்தில் செயல்படாத புறக் காவல் நிலையம் ! 

    By நமது நிருபர், நெய்வேலி  |   Published on : 19th December 2017 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள புறக் காவல் நிலையம் பெரும்பாலான நேரங்களில் பூட்டிக் கிடப்பதால், குற்றச் செயல்கள் அதிகரிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
    பண்ருட்டி பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். 
    பேருந்து நிலையத்தின் நுழைவுப் பகுதியில் புறக் காவல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பேருந்து நிலைய விரிவாக்கப் பணியின்போது புறக் காவல் நிலையக் கட்டடம் அகற்றப்பட்டது. இதனால், பேருந்து நிலையத்தில் குற்ற நிகழ்வுகள் அதிகரித்தன. 
    இதையடுத்து, இங்கு மீண்டும் புறக் காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
    இந்த நிலையில், கடந்த ஆண்டு விழுப்புரம் டிஐஜி-யாக பணியாற்றிய அனிசா உசேன், பண்ருட்டி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். 
    அப்போது, பண்ருட்டி பேருந்து நிலையத்தில் மீண்டும் புறக் காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என டிஐஜி உறுதி அளித்தார். 
    இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேருந்து நிலையத்தில் புறக் காவல் நிலையம் அமையவுள்ள இடத்தில் பூமி பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து, தகடு மூலம் மறைப்பு ஏற்படுத்தி புறக் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. 
    ஆனால், இந்தக் காவல் நிலையம், பெரும்பாலான நேரங்களில் பூட்டிக் கிடப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். 
    இதனால், பேருந்து நிலையப் பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்கிறதாம். 
    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: பேருந்து நிலையப் பகுதியில் திருட்டு சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. நகை, பணம், பொருள்களை இழந்தவர்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகின்றனர். எனவே, பூட்டிக் கிடக்கும் புறக் காவல் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 
    அப்போதுதான், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாகப் பிடிக்க முடியும். குற்றச் செயல்களும் குறையும் என்றனர். இதுகுறித்து பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆரோக்கியராஜ் கூறியதாவது: பண்ருட்டி பேருந்து நிலைய புறக் காவல் நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சில நேரங்களில் போலீஸார் வெளியே சென்றபோது பூட்டப்பட்டிருக்கலாம். குற்றச் செயல்களைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai