சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

    By  கடலூர்,  |   Published on : 20th December 2017 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்கக் கோரி, கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     மத்திய அரசானது கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்கி வந்தது. பின்னர் இந்தத் திட்டத்தில் வேலை நாள்கள் 150-ஆக உயர்த்தப்பட்டு, கூலியும் ரூ.203-ஆக அதிகரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் பணி வாய்ப்பு வழங்கி குறைந்த வேலையும், சமமான கூலியும் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
     ஆனால், கடலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, தங்களுக்கு பணி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் லட்சிய முன்னேற்றச் சங்கத்தினர் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர்.
     போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.கே.சந்தோஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் பொன்.சண்முகம், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் சித்ரா, ஆறுமுகம், பாலமுருகன், அமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கை தொடர்பாக ஊரக வளர்ச்சி முகமை அலுவலரை சந்திக்குமாறு கூறியதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள்
     அந்த அலுவலகத்துக்குச் சென்று தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
     அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்ய விரும்பும் மாற்றுத் திறனாளிகள் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் அவரவர் பகுதிக்குள்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலத்தில் வேலை கோரி மனு அளிக்கலாம். அதன் அடிப்படையில் வேலை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai