சுடச்சுட

    

    ஆருத்ரா விழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

    By  கடலூர்,  |   Published on : 22nd December 2017 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் அன்னதானம் வழங்க, மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
     சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர்த் திருவிழா வருகிற 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
     இதில், ஜனவரி 1-ஆம் தேதி தேரோட்டமும், 2-ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது. இந்த நாள்களில் விழாவில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு அமைப்பினர், தனிநபர்கள் அன்னதானம் வழங்குவது வழக்கம். அவ்வாறு வழங்கப்படும் அன்னதானம் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசின் அனுமதி பெற்ற பின்னரே வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆருத்ரா திருவிழா நாள்களில் அன்னதானம் செய்ய விரும்புவோர் கோயில் நிர்வாகம், காவல் துறையில் அனுமதி பெற்ற பின்னர் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகராட்சி பகுதிக்கான உணவு பாதுகாப்பு அலுவலரிடம் தாற்காலிக அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும். மேலும், அன்னதானம் செய்வோர் உணவு தயாரிப்பு, விநியோகம் செய்யும் இடங்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். உணவு தயாரிப்புக்கு தரமுள்ள மளிகைப் பொருள்கள், காய்கறிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்த வேண்டும்.
     பாதுகாக்கப்பட்ட குடிநீர் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அன்னதானம் உணவை சூடான நிலையில் மட்டுமே வழங்க வேண்டும். உணவுப் பண்டங்களை ஈ மொய்க்காமலும், தூசு படியாமலும் தகுந்த மூடியிட்டும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு மாதிரிகளை உணவுப் பாதுகாப்பு துறையின் ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும். பிளாஸ்டிக், பாலிதீன் பொருள்கள்ளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று ஆட்சியர் அதில் வலியுறுத்தி உள்ளார்.
     ஜன. 2-ஆம் தேதி விடுமுறை: ஆருத்ரா விழாவின் முக்கிய நிகழ்வான தரிசனம் நிகழ்வு ஜன.2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜன.20-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai