சுடச்சுட

  

  மதுக் கடைக்கு எதிர்ப்பு விளை நிலத்தில் கருப்புக் கொடியுடன் போராட்டம்

  By  கடலூர்,  |   Published on : 22nd December 2017 08:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாளிகைக்கோட்டம் கிராமத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கருப்புக்கொடியுடன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   பெண்ணாடம் அருகே உள்ள மாளிகைக்கோட்டம் கிராமத்தில் கடந்த 18-ஆம் தேதி வயல்வெளிப் பகுதிக்கு அருகே டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியினர் மறுநாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டாட்சியர் சிவக்குமார், மதுக் கடை மூடப்படுவதாக தெரிவித்தார். அதன்படி, புதன்கிழமை கடையை மூடுவதற்கு வந்த அதிகாரிகளை சிலர் முற்றுகையிட்டு, கடையை மூடக்கூடாதென வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடையை மூடமாட்டோம் என அலுவலர்கள் தெரிவித்துச் சென்றதைத் தொடர்ந்து கடை இயங்க ஆரம்பித்தது.
   இந்த நிலையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மதுக் கடையை அமைந்துள்ளதால் பெண்கள், மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், மது அருந்துபவர்கள் புட்டிகளை உடைத்து வயல்வெளியில் போடுவதால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறி விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வியாழக்கிழமை கருப்புக்கொடியுடன் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், மதுக் கடையை அகற்றும் வரை விவசாயப் பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai