சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் பதிவு செய்யாத 10 ஆயிரம் உணவு வணிகர்கள்

    By DIN  |   Published on : 23rd December 2017 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் பதிவு செய்யாத 10 ஆயிரம் உணவு வணிகர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது.
    உணவு மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தி, விற்பனைத் துறையில் ஈடுபடுவோர் தங்களது நிறுவனங்களை பதிவு செய்துகொள்ள வேண்டுமென மத்திய அரசு 2012-ஆம் ஆண்டில் சட்டம் நிறைவேற்றியது.
    இதையடுத்து, தமிழக அரசு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணயச் சட்டத்தை நிறைவேற்றி, அனைத்து உணவு உற்பத்தி, விற்பனையாளர்கள் தங்களது நிறுவனங்களை பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தியது.
    இதில் பதிவு செய்வதற்கான காலக்கெடு 2012-ஆம் ஆண்டு முதல் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.
    இந்த நிலையில், டிசம்பர் 31-ஆம் தேதியுடன் இந்தப் பதிவு நிறைவு பெறுவதாகவும், இதற்குப் பின்னர் கால நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது என்றும் மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
    இதனால், இதுவரை இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாதவர்கள், தங்களது நிறுவனங்களை பதிவுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
    கடலூர் மாவட்டத்தில் 17 ஆயிரம் உணவு வணிகர்கள் உள்ள நிலையில், இதுவரை 40 சதவீதம் பேர் (அதாவது 6,800 பேர்) மட்டுமே தங்களது நிறுவனத்தை பதிவு செய்துள்ளனர்.
    எனவே, டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பின்னர் பதிவு செய்யாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்க திட்டமிட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.
    நோட்டீஸ் வழங்கப்பட்ட 15 நாள்களில் பதிவு செய்யாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதில், அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
    ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு மேல் உணவு வணிகம் செய்பவர்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தி உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும். ரூ.12 லட்சத்துக்கு கீழ் வணிகம் செய்பவர்கள் ரூ.100 செலுத்தி உணவுப் பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.
    பதிவு சான்றிதழ் பெற பொது சேவை மையத்தில் ஆண்டுக்கு ரூ.100 செலுத்தி, 5 ஆண்டுகள் வரை உரிய கட்டணம் செலுத்தி பதிவு சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
    இதுகுறித்து கடலூர் மாவட்ட உணவுப் பொருள் வியாபாரிகள் கூட்டமைப்புச் செயலர் நா.செல்லப்பாண்டியன் கூறியதாவது:
    உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் விதிகள் மிகவும் கடினமாக உள்ளது. இதுகுறித்து வணிகர்களுக்கு போதுமான விழிப்புணர்வும் இல்லாததால் அதைப் பின்பற்றுவதில் சிரமங்களை சந்திக்கின்றனர்.
    எனவே, சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உரிமம் பெறுவதற்கான பணம் செலுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வங்கிகளுக்கு அலையும் நிலை உள்ளது.
    மேலும், சிறிய அளவில் தின்பண்டம், ரொட்டி முதலியவை உற்பத்தி செய்வோர் ஆண்டுதோறும் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, இவற்றை எளிமைப்படுத்த வேண்டும்.
    கடையில் எலி இருப்பது ஆய்வில் தெரியவந்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
    எனவே, பல கடுமையான விதிமுறைகள் உள்ளதை மாற்றுவதோடு, வரியை நேரடியாக வசூலிக்கும் முறையை கடைப்பிடிக்க வேண்டும். அபராதம் விதிக்கும் முறையை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai